கடைகள் 24 மணி நேரமும் திறந்திருக்க அனுமதி: போலீஸ் நிலையங்களுக்கு தெரிவிக்க உத்தரவு
கடைகள் 24 மணி நேரமும் திறந்திருக்க அனுமதி: போலீஸ் நிலையங்களுக்கு தெரிவிக்க உத்தரவு
ADDED : ஆக 29, 2025 02:36 AM

சென்னை: 'கடைகள், வணிக நிறுவனங்கள், 24 மணி நேரமும் திறந்திருக்க அனுமதி அளித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணை குறித்து, அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தெரிவிக்க வேண்டும்' என, டி.ஜி.பி., மற்றும் மாநகர போலீஸ் கமிஷனருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில், 10க்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றும் கடைகள், வணிக நிறுவனங்கள், வாரத்தில் ஏழு நாட்களும், 24 மணி நேரமும் இயங்க அனுமதி அளித்து, கடந்த 2019ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
இது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நீட்டிக்கப்படுகிறது. அதன்படி, கடந்த ஜூன் மாதம் நீட்டிக்கப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டது.
ஆனால், இரவு நேரங்களில் கடைகளை மூடும்படி, போலீசார் நிர்ப்பந்தம் செய்கின்றனர் என, இந்திய தேசிய உணவக சங்கம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த மனு, நீதிபதி என்.சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் ஆஜராகி, ''சமீபத்திய அரசாணை, கடந்த ஜூன் 5 முதல் அமலுக்கு வந்துள்ளது. எனினும், இரவு நேரங்களில் உணவகங்கள் செயல்படக் கூடாது என, தொடர்ந்து காவல்துறை தெரிவித்து வருகிறது.
''சமீபத்திய அரசாணை குறித்து, அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் அனுப்ப வேண்டும்.
''இரவு நேரங்களில் உணவகங்களின் சட்டப்பூர்வமான வணிக நடவடிக்கைகளில், ஊழியர்கள் ஈடுபடுவதை தடுக்கக் கூடாது என்பதை, அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும், டி.ஜி.பி., தெரியப்படுத்த வேண்டும்,'' என்றார்.
காவல்துறை தரப்பில் அரசு வழக்கறிஞர் கே.எம்.டி.முகிலன் ஆஜராகி, ''காவல்துறை குறுக்கீடு இருந்தால், சம்பந்தப்பட்ட உணவகங்கள், நீதிமன்றத்தை அணுக வேண்டும்.
''தனிப்பட்ட நிறுவனங்கள் மீது, குறிப்பிட்ட புகார்களை பெறும்போது மட்டுமே, காவல்துறை தலையிடுகிறது,'' என்றார்.
இதை பதிவு செய்த நீதிபதி, 10 பேருக்கு மேல் பணிபுரியும் கடைகள் மற்றும் பிற நிறுவனங்கள், ஆண்டு முழுதும் 24 மணி நேரமும் திறந்திருக்க அனுமதிக்கும் அரசாணை குறித்து, தமிழகத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும், டி.ஜி.பி., மற்றும் மாநகர போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட்டு, மனுவை முடித்து வைத்தார்.