தானத்தில் உயர்ந்தது உடல் உறுப்பு தானம்; சிறுநீரகம் வேண்டி 7,268 பேர் காத்திருப்பு!
தானத்தில் உயர்ந்தது உடல் உறுப்பு தானம்; சிறுநீரகம் வேண்டி 7,268 பேர் காத்திருப்பு!
UPDATED : டிச 19, 2024 10:27 AM
ADDED : டிச 19, 2024 09:35 AM

சென்னை: அதிகமான உடல் உறுப்புகள் தானம் செய்த மாநில தரவரிசை பட்டியலில் தமிழகம் முதல் இடத்தை பிடித்துள்ளது. நடப்பாண்டில் மட்டும் 262 பேர் உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளனர்.
ஒருவர் இறக்கும்போது, அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்படுவதால், பலருக்கு மறுவாழ்வு கிடைக்கிறது. இதனால், உடல் உறுப்பு தானம், மிக உயரியதாக கருதப்படுகிறது. தானமாக கிடைத்த உடல் உறுப்புகள் மூலம் மறுவாழ்வு பெற்றவர்கள் இவ்வுலகில் ஏராளம். இதனால் உடல் உறுப்பு தானம் அவசியம் குறித்து, சுகாதார துறை தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், அரசு மற்றும் தனியார் உடல் உறுப்புகள் மறுவாழ்வு மையத்தில், நடப்பாண்டில் மட்டும் 262 பேர் உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளனர். அவர்கள் தானம் செய்த உறுப்புகள் விவரம் வருமாறு;
* இதயம்- 91
* நுரையீரல்- 85
* கல்லீரல்- 203
* சிறுநீரகம்- 442
* கணையம் 3
* சிறுகுடல்- 6
* கைகள்- 3
இந்த ஆண்டு முடிய இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், உடல் உறுப்பு தானம் செய்வதில் தமிழகம் புதிய சாதனை படைத்துள்ளது. உடல் உறுப்புகள் மறுவாழ்வு மையம் திட்டம் 2008ம் ஆண்டு துவங்கியது.
அப்போது 7 பேர் மட்டுமே உடல்உறுப்புகள் தானம் செய்தனர். தற்போது, நடப்பாண்டில் புதிய சாதனையாக 262 பேர் உடல் உறுப்புகள் தானம் செய்துள்ளனர். ஆண்டு வாரியாக உடல் உறுப்புகள் தானம் செய்தவர்கள் விவரம் பின்வருமாறு:
ஆண்டு - தானம் செய்தவர் எண்ணிக்கை
2008- 7
2009- 59
2010- 87
2011-70
2012-83
2013-130
2014-135
2015-155
2016-185
2017-160
2018-140
2019-127
2020-55
2021-60
2022-156
2023-178
2024-262
உறுப்பு தானம் செய்பவர்களுக்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்ததில் இருந்து நன்கொடைகள் அதிகரித்தது என டாக்டர்கள் தெரிவித்தனர்.
அத்துடன், தானம் பெறப்பட்டவர் உடல் கொண்டு செல்லப்படும் போது, மருத்துவமனை ஊழியர்களும் ஊர்வலமாக சென்று இறுதி மரியாதை செலுத்துகின்றனர்.
முதல்வரின் உடல்நலக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனைகளில் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைகள் செய்யப்படுவதால், உறுப்புகளுக்கான தேவை தொடர்ந்து அதிகமாக உள்ளது. தமிழகத்தில் உடல் உறுப்பு தானம் தேவைப்படுவோர், அரசிடம் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில், தானமாக கிடைக்கும் உறுப்புகள் பொருத்தப்படுகின்றன
தற்போதுள்ள முன்பதிவு பட்டியலின்படி தமிழகத்தில் சிறுநீரக தானம் பெறுவதற்காக 7268 பேர் காத்திருக்கின்றனர். பிற உடல் உறுப்புகளுக்காக காத்திருப்போர் எண்ணிக்கை வருமாறு:
கல்லீரல்- 511
இதயம்- 73
நுரையீரல்- 55
சிறுகுடல்- 6
கணையம்- 2