சொத்து பத்திரம் பதிவு செய்ய இனி மூலப்பத்திரம் கட்டாயம்
சொத்து பத்திரம் பதிவு செய்ய இனி மூலப்பத்திரம் கட்டாயம்
ADDED : ஏப் 29, 2025 02:03 AM

சென்னை: பத்திரப்பதிவின் போது, சம்பந்தப்பட்ட சொத்து தொடர்பான முந்தைய அசல் ஆவணம் தாக்கல் செய்வதை கட்டாயமாக்க வழி செய்யும் மசோதா, சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
புதிய பிரிவு
சொத்து விற்பனை தொடர்பான பத்திரம் பதியும் போது, முந்தைய அசல் ஆவணம், அதாவது மூலப்பத்திரம் தாக்கல் செய்வது கட்டாயமாக்கப்பட்டு, பதிவு சட்டத்தில், '55ஏ' என்ற புதிய பிரிவு சேர்க்கப்பட்டது.
இதை எதிர்த்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், இப்புதிய பிரிவை பயன்படுத்த தடை விதித்தது. பதிவு சட்டத்திற்கு முரணாக அமைந்துள்ளதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, பதிவு சட்டத்தில் மோசடியை தடுப்பதற்காக வழங்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி, புதிய சட்டத்திருத்த மசோதாவை, பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி, சட்டசபையில் நேற்று தாக்கல் செய்தார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
பதிவு சட்டத்தில், '34சி' என்ற புதிய பிரிவு சேர்க்கப்படுகிறது.
ஒரு பத்திரம் பதிவுக்காக சார் - பதிவாளரிடம் தாக்கல் செய்யப்படும் போது, அதற்கு, 10 நாட்களுக்கு முன் பெறப்பட்ட வில்லங்க சான்றிதழ், அந்த சொத்துக்கான மூலப்பத்திரமான அசல் ஆவணம் போன்றவற்றை தாக்கல் செய்ய வேண்டும்.
இதுபோன்று, முந்தைய அசல் ஆவணம் இல்லாத நிலையில், அந்த பத்திரத்தை பதிவு செய்யக்கூடாது.
அந்த சொத்து அடமானம் வைக்கப்பட்டு இருந்தால், அடமானம் பெற்றவரிடம் இருந்து, தடையில்லா சான்று பெற்று தாக்கல் செய்ய வேண்டும்.
கண்டறிய முடியவில்லை
மூதாதையர் சொத்தாக இருந்து, அதற்கு மூலப்பத்திரம் இல்லாத நிலையில், வருவாய் துறையில் வழங்கப்பட்ட பட்டா சமர்ப்பிக்கப்பட்டால் மட்டுமே, பத்திரப்பதிவு மேற்கொள்ளப்படும்.
முந்தைய அசல் ஆவணம் தொலைந்து போயிருந்தால், அதுகுறித்து உள்ளூர் நாளிதழில் வெளியிடப்பட்ட விளம்பரம், காவல் துறையினர் வழங்கிய, 'கண்டறிய முடியவில்லை' என்ற சான்றிதழ் தாக்கல் செய்யப்பட்டால் மட்டுமே, பத்திரப்பதிவு மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.