ADDED : டிச 04, 2025 05:50 AM

சென்னை: ''மழைக்காலத்தில் வயிற்றுப் போக்கு பாதிப்பு ஏற்பட்டால், நீர் இழப்பை தடுக்க, வீட்டிலேயே ஓ.ஆர்.எஸ்., கரைசல் என்ற, உப்பு மற்றும் சர்க்கரை கலந்த தண்ணீர் தயாரித்து பயன்படுத்தலாம்,'' என, பொது சுகாதாரத்துறை இயக்குநர் சோமசுந்தரம் தெரிவித்துள்ளார்.
மழைக் காலங்களில் அசுத்தமான குடிநீர், சுகாதாரமற்ற உணவு சாப்பிடுவதன் வாயிலாக, வயிற்றுப் போக்கு ஏற்படுகிறது. இதை, சாதாரணமான வயிற்றுப் போக்கு என, அலட்சியமாக இருந்து விட முடியாது.
தொடர்ந்து வயிற்றுப் போக்கு இருக்கும்போது, உடலில் நீர்ச்சத்து குறைவு ஏற்பட்டு, சிறுநீரக பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, வயிற்றுப் போக்கு தொடர்ந்து இருந்தால், அலட்சியம் காட்டாமல், சிகிச்சைப் பெறுவதும், அடிக்கடி குடிநீர் பருகுவதும், குறிப்பாக, ஓ.ஆர்.எஸ்., கரைசல் குடிப்பது அவசியம்.
அரசு மருத்துவமனைகளில், ஓ.ஆர்.எஸ்., கரைசல், இலவசமாக வழங்கப்படும் நிலையில், அதை வீட்டிலேயே தயாரித்து பயன்படுத்தலாம் என, பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
இது குறித்து, பொது சுகாதாரத்துறை இயக்குநர் சோமசுந்தரம் கூறியதாவது:
அரசு மருத்துவமனைகளில் வயிற்றுப் போக்குக்கான, ஓ.ஆர்.எஸ்., பவுடர் இலவசமாக வழங்கப்படுகிறது. தனியார் மருந்தகங்களிலும், விற்பனையில் உள்ளது. அதேநேரம், மழை நேரங்களில் வெளியே செல்ல முடியாதவர்கள், வீட்டிலேயே தயாரித்து பயன்படுத்தலாம்.
அதன்படி, 200 மி.லி., குடிநீரை காய்ச்சி, குளிர்ந்த பின், அதில் ஒரு சிட்டிகை உப்பு, நான்கு சிட்டிகை சர்க்கரை போட்டு, நன்கு கலந்து அருந்தலாம். இதன் வாயிலாக, உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படுவது தவிர்க்கப்படுவதுடன், மற்ற பாதிப்புகளில் இருந்தும், தற்காத்துக்கொள்ள முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.

