ADDED : மே 28, 2024 04:56 AM

சென்னை : 'பல்கலைகளில் மூடப்பட்டுள்ள தமிழ் துறைகள் மீண்டும் செயல்பட, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தமிழறிஞர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
நாட்டில் ஹைதராபாத் பல்கலை, உஸ்மானியா பல்கலை, பெங்களூரு பல்கலை, மைசூரு பல்கலை, மும்பை பல்கலை உள்ளிட்டவற்றில், தமிழ் துறைகள் இயங்குவதாக, அவற்றின் இணையதளங்களில் தகவல் உள்ளது.
செயல்படவில்லை
அந்தந்த மாநிலங்களில், தமிழ் மொழியில் ஆய்வு செய்ய விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்கும் போது, பேராசிரியர் பணியிடங்கள் நியமிக்கப் படாததால் துறைகள் செயல்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து, தமிழறிஞர்கள் கூறியதாவது: ஆக்ரா, சண்டிகர், பாட்டியாலா, கோல்கட்டா, பஞ்சாப், அலகாபாத், லக்னோ பல்கலைகள் மற்றும் டில்லி லேடி ராம் கல்லுாரி உள்ளிட்டவற்றில், தமிழ் துறைகள் இயங்கின. பெரும்பாலானவை சத்தமில்லாமல் மூடப்பட்டு விட்டன.
தமிழகத்தில் சென்னை பல்கலை உள்ளிட்டவற்றில், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, சமஸ்கிருதம், பெர்சிய மொழிகளுக்கான தனித்துறைகள் செயல்படுகின்றன. இங்குள்ள பிற மாநில மாணவர்கள், அவர்களின் தாய்மொழியில் ஆய்வு செய்ய முடிகிறது அல்லது ஒப்பீட்டு மொழியியல் ஆய்வு செய்ய முடிகிறது.
நிதியுதவி
தமிழக அரசியல்வாதிகளும், அரசும், வெளிநாட்டு பல்கலைகளில், தமிழ் இருக்கைகள் அமைக்க கோடிக்கணக்கில் நிதியுதவி அளிக்கின்றனர். இதனால், தமிழக அரசியல்வாதிகளுக்கு பெயரும் புகழும் வெளிநாடுகளில் கிடைக்கிறது.
ஆனால், நம் நாட்டில் உள்ள பல்கலைகளில் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல், அவை மூடப்படுகின்றன. இதில், அரசும், தமிழாசிரியர்களும் கவனம் செலுத்துவதில்லை.
இதனால், வெளிமாநிலங்களில் பணியாற்றுவோரின் வாரிசுகள், தாய்மொழி கல்வியில் ஆய்வு செய்யும் வாய்ப்பை இழக்கின்றனர். இதை அரசு கவனித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.