ADDED : செப் 17, 2025 02:07 AM

சென்னை:மயிலாடுதுறையில் நடந்துள்ள, ஜாதி ஆணவப் படுகொலைக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் பெ.சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: மயிலாடுதுறை மாவட்டம் அடியாமங்கலம், பெரிய தெருவை சேர்ந்த வைரமுத்துவும், அதே பகுதியில் வசித்து வரும் மாலினியும், கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்கள் காதலை அறிந்த மாலினியின் பெற்றோர், தன் மகளுக்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
மாலினியின் தாயார், வைரமுத்து பணிபுரியும் இடத்திற்கு சென்று, அவரை தாக்கியுள்ளார். மாலினியின் சகேதாரர்கள் குகன் மற்றும் குணால் ஆகியோர், வைரமுத்துவை அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளனர். இந்த சம்பவத்தை போலீசார் தடுக்காமல் இருந்தது கண்டிக்கத்தக்கது. வைரமுத்துவின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு, குடும்ப உறுப்பினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். ஜாதி ஆணவப் படுகொலைகளை தடுக்கும் வகையில், தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

