மார்க்சிஸ்ட் கம்யூ., மாநில செயலராக சண்முகம் தேர்வு
மார்க்சிஸ்ட் கம்யூ., மாநில செயலராக சண்முகம் தேர்வு
UPDATED : ஜன 05, 2025 09:03 PM
ADDED : ஜன 05, 2025 05:37 PM

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஆக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
இரண்டு முறை
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 வது மாநில மாநாடு கடந்த 3ம் தேதி விழுப்புரத்தில் துவங்கியது. இக்கூட்டத்தில், அக்கட்சியின் கட்சியின் அரசியல் தலைமைக் குழு ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத், மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 80 நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கட்சியின் விதிகளின்படி மாநிலச் செயலாளரின் வயது 72க்குள் இருக்க வேண்டும். கே.பாலகிருஷ்ணனுக்கு வயது 71 ஆகிறது. இவர் ஆறு ஆண்டுகள் மாநிலச் செயலர் பதவியில் இருந்தார்.
தேர்வு
இன்று( ஜன.,05) நடந்த கூட்டத்தில், அக்கட்சியின் புதிய மாநிலச் செயலாளர் ஆக பெ. சண்முகம் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இவர்,தற்போது அக்கட்சியின் மத்திய குழு மற்றும் செயற்குழு உறுப்பினராக உள்ளார். தமிழக மலைவாழ் மக்கள் சங்கம், விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவராக பதவி வகித்தவர் ஆவார். கட்சியின் இளைஞர் அமைப்பிலும் பணியாற்றி உள்ளார்.
சண்முகம், தர்மபுரி வாச்சாத்தியில் பழங்குடியின மக்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதலை கண்டித்து சட்டப்போராட்டம் நடத்தியவர். கடந்த ஆண்டு தமிழக அரசின் அம்பேத்கர் விருதை முதல்வர் ஸ்டாலினிடம் இருந்து பெற்றுக் கொண்டவர்.
போராடுவோம்
மாநிலச் செயலர் ஆக தேர்வான பின் சண்முகம் பேசியதாவது: உழைக்கும் மக்களுக்கு ஆதரவாக போராடுவோம். தமிழகத்தில் சாதிய ஒடுக்குமுறை நீங்கும் வரை போராட்டத்தை தொடர்வோம்.கே.பாலகிருஷ்ணன், மத்திய குழு உறுப்பினர் ஆக நீடிப்பார். இவ்வாறு அவர் பேசினார்.
வேண்டாம்
கூட்டத்தில் பாலகிருஷ்ணன் பேசியதாவது: 3வது முறையாக மாநில செயலாளர் ஆவதற்காக தி.மு.க.,வை விமர்சித்ததாக கூறுகிறார்கள். பொதுக்கூட்டத்தில் பேசுவதை வைத்தா கட்சி கூட்டத்தில் முடிவு செய்வார்கள். எனக்கு மீண்டும் பதவி வருவதற்கு வாய்ப்புகள் இருந்த போதிலும் அதனை வேண்டாம் எனக்கூறிவிட்டேன். கட்சியை பொறுத்தவரை 72 வயதை எட்டியவர்கள் மாநில குழுக்களில் இடம்பெற முடியாது. வாய்ப்பு இருக்கும்போதே விட்டுக் கொடுத்து மாநிலச் செயலாளர் பதவிவழங்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
பதவிக்காலம் முடியும் கே.பாலகிருஷ்ணன் தி.மு.க., அரசின் செயல்பாடுகளை கண்டித்து அறிக்கை வெளியிட்டார். இதனால், கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது. அவரை கண்டித்து தி.மு.க.,வின் கட்சி பத்திரிகையில் இன்று தலையங்கம் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
தலைவர்கள் வாழ்த்து
முதல்வர் ஸ்டாலின்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளராக பொறுப்பேற்ற பெ.சண்முகத்திற்கு பாராட்டுகள். ஒடுக்கப்பட்ட மக்கள், விவசாயிகளுக்காக உழைத்தவருக்கு அம்பேத்கர் விருதை அரசு வழங்கியது. சண்முகம் புதிய செயலாளராக தேர்வு செய்யப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை
சண்முகம் பணிகளால் இண்டியா கூட்டணி மேலும் வலிமை பெறும். மாணவர் பருவம் முதலே கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இணைந்து செயல்பட்டவர். விவசாயிகள், பட்டியலின மக்களுக்காக போராடியவர் சண்முகம் எனக்கூறியுள்ளார்.
த.வெ.க., தலைவர் விஜய் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள பெ.சண்முகத்திற்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். பொதுவுடைமைப் பாதையில் ஏழை, எளிய மக்களுக்காகப் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்த, போற்றுதலுக்குரிய தங்களின் பணி, வரும் காலங்களிலும் சமரசமின்றித் தொடரட்டும். இவ்வாறு விஜய் கூறியுள்ளார்.