விவசாயிகள் விருப்பம் தெரிவிக்கும் இடங்களில் நெல் கொள்முதல் நிலையம்
விவசாயிகள் விருப்பம் தெரிவிக்கும் இடங்களில் நெல் கொள்முதல் நிலையம்
ADDED : டிச 25, 2025 05:43 AM

சென்னை: விவசாயிகள் விருப்பம் தெரிவிக்கும் இடங்களில், நேரடி நெல் கொள்முதல் நிலையம் துவக்குமாறு, தமிழக நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகளுக்கு, உணவு துறை அமைச்சர் சக்கரபாணி உத்தரவிட்டுள்ளார்.
மத்திய அரசின் இந்திய உணவு கழகம் சார்பில், தமிழக விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யும் பணியை, தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகம் மேற்கொள்கிறது. இந்த நெல், அரிசியாக மாற்றப்பட்டு, ரேஷன் கடைகளில் கார்டுதாரர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.
நடப்பு நெல் கொள்முதல் சீசன், செப்., 1ல் துவங்கியது. இது, 2026 ஆக., முடிவடைகிறது. கடந்த அக்., இறுதியில் வட கிழக்கு பருவ மழை பெய்தது. அந்த சமயத்தில், சாக்கு பை தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால், நெல் கொள்முதலி ல் தாமதம் ஏற்பட்டது.
இதனால், விவசாயிகளால் வாணிப கழகத்திடம் நெல்லை வழங்க முடியாததால், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில், நெல் மூட்டைகள் மழையில் நனைந்து பாழாகின.
இதுவரை, 15 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. வரும் ஜனவரியில் இருந்து சம்பா பருவ நெல் அறுவடை செய்யப்பட உள்ளது.
அந்த சமயத்தில், நெல்லை விரைவாக கொள்முதல் செய்வதற்கான ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்யுமாறு, வாணிப கழக அதிகாரிகளுக்கு, அமைச்சர் சக்கரபாணி உத்தர விட்டுள்ளார்.
இதுகுறித்து, உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
வரும் பொங்கலுக்கு பின், நெல் கொள்முதல் அதிகம் இருக்கும்.
இதனால், விரைவாக நெல் கொள்முதல் செய்வதற்கு வசதியாக, விவசாயிகள் விருப்பம் தெரிவிக்கும் இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் துவக்குமாறும், போதிய அளவுக்கு சாக்கு பைகள் போன்றவற்றை தயார் நிலையில் வைத்திருக்குமாறும், அமைச்சர் சக்கரபாணி அறிவுறுத்தியுள்ளார்.
விவசாயிகளின் தேவைகள் குறித்து கருத்து கேட்க, இம்மாத இறுதியில், தஞ்சை அல்லது திருவாரூரில் கூட்டம் நடத்தப்படும். நெல் கொள்முதலை கண்காணிக்க, தாலுகாதோறும் அதிகாரிகளும் நியமிக்கப்பட உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

