நெல் கொள்முதல் நிலையங்கள் கலெக்டர்கள் திறக்க உத்தரவு
நெல் கொள்முதல் நிலையங்கள் கலெக்டர்கள் திறக்க உத்தரவு
ADDED : செப் 10, 2026 11:44 PM
சென்னை: மத்திய அரசின் இந்திய உணவு கழகம் சார்பில், தமிழக விவசாயிகளிடம் இருந்து, நெல் கொள்முதல் செய்யும் பணியை, தமிழக அரசின் நுகர்பொருள் வாணிபக் கழகம் மேற்கொள்கிறது.
இந்த நெல், அரிசியாக மாற்றப்பட்டு, ரேஷன் கடைகள் வாயிலாக, கார்டுதாரர்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. நடப்பு நெல் கொள்முதல் சீசனை, இம்மாதம் 1ம் தேதி முதல் தொடங்க, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
எனவே, இம்மாதம் 1ம் தேதி முதல், 2027 ஆக., 31ம் தேதி வரை, நெல் கொள்முதல் செய்ய, அனைத்து மாவட்டங்களிலும், தேவையான எண்ணிக்கையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க, கலெக்டர்களுக்கு, உணவுத் துறை செயலர் அமுதா உத்தரவிட்டுள்ளார்.
இந்த சீசனில் கொள்முதல் செய்யப்படும், 100 கிலோ எடை உடைய, குவின்டால் சன்னர ரக நெல்லுக்கு, மத்திய அரசின் சார்பில், 2,461 ரூபாய், அதனுடன் சேர்த்து தமிழக அரசின் ஊக்கத்தொகை 289 ரூபாய் வழங்கப்படும்.
பொது ரக நெல்லுக்கு, மத்திய அரசின் சார்பில் 2,441 ரூபாய், தமிழக அரசின் சார்பில் 159 ரூபாய் ஊக்கத்தொகை சேர்த்து வழங்கப்படும். இந்த சீசனில், 30 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
