ADDED : ஜன 25, 2024 10:30 PM

கோவை: கோவை, மேட்டுப்பாளையத்தை சேர்ந்த வள்ளிகும்மியாட்ட நடன ஆசிரியர் பத்ரப்பனுக்கு, பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம் அருகே உள்ள தாசனூர் என்னும் அழைக்கும் தாசம்பாளையத்தில் மாரன்ன கவுடருக்கும், ரங்கம்மாளுக்கும் பிறந்தவர் பத்திரப்பன். 16.04.1936ம் ஆண்டு பிறந்தார். எட்டாம் வகுப்பு வரை படித்த இவர், கிராமிய கலைமீது அதிக ஆர்வம் கொண்டவர்.
இவரது மனைவி மாதம்மாள். இவர்களுக்கு நக்கீரன் என்ற மகன் இறந்து விட்டார். முத்தம்மாள் என்ற மகள். மனைவி மாதம்மாள் இறந்து விட்டார்.
இவர் கடந்த, 60 ஆண்டுகளுக்கு மேலாக கிராமங்களில் நடைபெறும் திருவிழாக்களில் வள்ளி கும்மி என்னும் கிராமிய நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். கடந்த 20 ஆண்டுகளில் தாசனூரில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகள்,170 பேருக்கு இலவசமாக வள்ளி கும்மி கிராமிய கலை நிகழ்ச்சிகளை கற்றுக் கொடுத்துள்ளார்.
மேட்டுப்பாளையம் நகராட்சி ராஜபுரத்தில் உள்ள மகளிர் குழுவிற்கு இலவசமாக வள்ளி கும்மி கிராமியக் கலையை கற்றுக் கொடுத்துள்ளார். தமிழக அரசு, 2019 ம் ஆண்டு இவருக்கு கலை மாமணி விருது வழங்கியுள்ளது. தற்போது இவர் மகள் வீட்டில் தங்கி, விவசாயம் செய்து வருகிறார்.