40 அரசு மருத்துவமனைகளில் கட்டண படுக்கை வார்டு வசதி
40 அரசு மருத்துவமனைகளில் கட்டண படுக்கை வார்டு வசதி
ADDED : டிச 03, 2024 11:58 PM
சென்னை:''வசதி படைத்தவர்கள் சிகிச்சை பெற, 40 அரசு மருத்துவமனைகளில், கட்டண படுக்கை வார்டுகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன,'' என, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை கிண்டியில் உள்ள, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலையில், 'டிஜிட்டல் பல் மருத்துவம்' கருத்தரங்கை, அமைச்சர் சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.
அப்போது, அவர் அளித்த பேட்டி:
அரசு மற்றும் தனியார் பல் மருத்துவ கல்லுாரிகளின் மாணவ, மாணவியர், பேராசிரியர்கள் பயன்பெறும் வகையில், இரண்டு நாள் கருத்தரங்கம் நடக்கிறது.
இது, பல் மருத்துவத்தின் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு உதவும். கடந்த அக்., 14ல் வடகிழக்கு பருவமழை துவங்கியது.
அதிலிருந்து சிறப்பு மருத்துவ முகாம்கள் தொடர்ச்சியாக நடத்தப்படுகின்றன. இதுவரை தமிழகம் முழுதும் 54,107 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டதில், 29 லட்சத்து 29,667 பேர் பயன் அடைந்து உள்ளனர்.
சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் மட்டுமே கட்டண வார்டுகள் இருந்தன. இதில், அரசியல் தலைவர்கள், வசதி உள்ளோர் சிகிச்சை பெற்றனர்.
அதேபோல் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், வசதி உள்ளோர் சிகிச்சை பெற வேண்டும்; அதற்கான ஏற்பாட்டை அரசு தரப்பில் செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்தது. அதையடுத்து, 40 அரசு மருத்துவமனைகளில், 1,000 - 1,500 ரூபாய் கட்டணத்தில், தனி அறைகளில் சிகிச்சை பெறும் வகையில், தனி வார்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன. இவற்றில், 'டிவி', குளியல் அறை, கழிப்பறை, வெந்நீர், குளிர் நீர் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.