sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பாலைவன மஞ்சள் ரோஜா

/

பாலைவன மஞ்சள் ரோஜா

பாலைவன மஞ்சள் ரோஜா

பாலைவன மஞ்சள் ரோஜா


ADDED : செப் 21, 2011 06:16 PM

Google News

ADDED : செப் 21, 2011 06:16 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மன்னராட்சி மாய்ந்துவிட்டது.

மகுடங்கள் சாய்ந்து விட்டன. மக்களாட்சி வீறுகொண்டு நடக்கிறது என்கிற காலகட்டம் இது. ஆனாலும், கற்சுவர்களால் கைகோர்த்து, கோட்டை என்று பெயர் பெற்று, மன்னர்களையும் அவர்தம் வம்சாவளிகளையும், மக்களையும் காத்து இன்றளவும் அழியாமல் தலைநிமிர்ந்து நிற்கின்ற கோட்டைகள், இந்த பாரததேசம் முழுவதும் ஆங்காங்கே நிலை கொண்டு, மன்னராட்சியை நினைவூட்டுகின்றன. அப்படி உயிர்ப்போடு இருக்கும் கோட்டையை கண்டிருக்கிறீர்களா? இல்லையென்றால் ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஜெய்சால்மர் கோட்டைக்கு ஒருமுறை போய் வாருங்கள். அந்த கோட்டைக்குள் இன்றளவும் மக்கள் இன்பமாக வாழ்ந்து வருகிறார்கள்.



தார் பாலைவனத்தின் மத்தியில், திரிகுடா குன்றின் தலையில் சூட்டப்பட்ட கிரீடம் போல், தரையிலிருந்து முப்பது மீட்டர் உயரத்தில், விஸ்வரூப தரிசனம் தருகிறது ஜெய்சால்வர் கோட்டை. மஞ்சள் நிற மணல் கற்களை கொண்டு கட்டப்பட்டிருக்கும் இக்கோட்டை, பகல் நேரத்தில் சூரியக் கதிர்களால் தங்கம் போல் ஜொலிக்கிறது. இதனால் தங்கக்கோட்டை என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பெயரிலேயே, இந்த கோட்டையின் சரித்திரத்தை மையமாக வைத்து தான் எழுதிய நாவலை படமாக்கியிருக்கிறார் சத்யஜித் ரே.

ஜெய்சால்மர் கோட்டையை 1156ல், பகதிராஜபுத்திர வம்சத்தை சார்ந்த அரசர் ஜெய்சால் என்பவர் கட்டியிருக்கிறார். இதை கட்டி முடிக்க ஏழு ஆண்டுகள் ஆனதாம். போர்க்காலங்களில் பகைவர்களின் தாக்குதலை சமாளிக்கும்படி 3 பாதுகாப்பு சுவர்களை கொண்டிருக்கிறது இந்த காவல் கோட்டை.

கோட்டையின் உட்பகுதி. இங்கே ஒரு இந்தியனின் சராசரி வாழ்க்கை அன்றாடம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. பரபரப்பாக ஓடிக் கொண்டிதருக்கும் மனிதர்கள், தள்ளுவண்டியில் காய்கறிகளை விற்றுக் கொண்டிருக்கும் வியாபாரி, சீருடை அணிந்து பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், உல்லாச நடைபோடும் வெளிநாட்டுப் பயணிகள், அவர்களுக்காக திறக்கப்பட்டு இருக்கும் பிரெஞ்சு, இத்தாலிய உணவகங்கள், விரையும் வாகனங்கள், பால் கேன்களை தூக்கிசெல்லும் பால் விற்பவர்கள் என மன்னர்கள் காலத்தில் இங்கே வாழ்ந்த மக்களின் வம்சாவளிகள் இன்றுவரை இடம் பெயராமல் வாழ்கிறார்கள். மக்கள் தொகை அதிகமானதால், கோட்டையின் வெளியே உள்ள இடங்களை சுற்றியும் குடியேறி இருக்கிறார்கள்.

பச்சை பசேல் என பரந்திருக்கும் தோட்டங்கள். அதன் நடுவே அழகிய பூக்களை தாங்கி நிற்கும் செடிகள். பின்னணியில், மனதை சுண்டி இழுக்கும் 'ராஜ்மஹால்' அரண்மனை! அரண்மனையின் ஏழுமாடி கட்டிடம் அருங்காட்சியமாக ஆக்கப்பட்டிருக்கிறது. மகாராணிகளின் விலை உயர்ந்த ஆடைகள், போர்க்கால ஆயுதங்கள், சமைக்க உபயோகப்படுத்திய பாத்திரங்கள் என்று வகைப்படுத்தி, இங்கே காட்சிக்கு வைத்திருக்கிறார்கள். வெகு நேர்த்தியாக உருவாக்கப்பட்ட அரண்மனையின் கதவுகள், ஜன்னல்கள், முற்றங்கள், ஓவியங்கள் என அழகு மிளிரும் அத்தனையும்... மாடிப்படிகளில் ஏறிவந்த தேக அசதியை விரட்டி விடுகின்றன. ஒவ்வொரு மாடியிலிருக்கும் ஜன்னல்கள் வழியாக ஜெய்சால்மர் நகரத்தின் அழகை கண்டு ரசிக்கலாம்.

ஜெய்சால்மர் கோட்டையின் உள்ளே 15, 16 நூற்றாண்டுகளில் கட்டப்பட்ட ஏழு சமணக் கோவில்கள் உள்ளன. இவை தவிர, இங்கிருக்கும் இந்துக்களின் கோவிலான லஷ்மிநாத் புகழ்பெற்றது. 1494ல் கட்டப்பட்ட இக்கோவிலில் இருக்கும் லஷ்மி விக்கிரகத்தின் பேரழகு, பார்ப்போரை பக்தி பரவசத்தில் ஆழ்த்துகிறது.

ஜெய்சால்மரில் அளவில்லா செல்வங்களை வியாபாரத்தின் மூலம் ஈட்டி, வியாபாரிகள் கட்டிய வீடுகளை ஹவேலிகள் என்று அழைக்கிறார்கள். மிக நேர்த்தியான, நுண்ணிய வேலைப்பாடுகளுடன் கூடி இந்த கட்டிடங்களின் வயது பல நூறு ஆண்டுகள், எண்ணற்ற அறைகள், அலங்கார வளைவுகள், எழில் கொஞ்சும் கதவுகள், ஜன்னல்கள் என சுற்றி சுழலும் நம் கண்கள், படைத்தவனுக்கு பரவசமாய் நன்றி சொல்வது நிச்சயம். இந்த வீடுகளில் சில, அருங்காட்சியமாக ஆக்கப்பட்டுள்ளன. பலவற்றில், அதன் உரிமையாளர்கள் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதில்.... வியாஸ் ஹவேலி, ஸ்ரீநாத் பேலஸ் போன்றவை நாம் கட்டாயமாக பார்க்க வேண்டியவை.



வெயில் மயங்கும் மாலை நேரம். கோட்டையிலிருந்து வெளிவந்து திரும்பி பார்க்கையில் பாலைவனத்தில் பூத்த மஞ்சள் ரோஜாவாக ஜெய்சால்மரின் அழகு மனதில் நிறையும்.



எப்போது போகலாம்?

அக்டோபர் முதல் மார்ச் வரையிலின மாதங்கள் ஜெய்சால்மர் பயணத்திற்கு உகந்தவை.



எப்படி போகலாம்?

ஜோத்பூர் வரை விமானம் அல்லது ரயில் மூலம் சென்று அங்கிருந்து சாலை மார்க்கமாக ஜெய்சால்மர் செல்லலாம்.



உதவிக்கு

ராஜஸ்தான் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் போன்: 02992 252406



- சாந்தகுமாரி சிவகடாட்சம்








      Dinamalar
      Follow us