பாலமேடு ஜல்லிக்கட்டு; காளைகளுடன் மல்லுக்கட்டிய இளைஞர்கள்
பாலமேடு ஜல்லிக்கட்டு; காளைகளுடன் மல்லுக்கட்டிய இளைஞர்கள்
UPDATED : ஜன 16, 2024 05:30 PM
ADDED : ஜன 16, 2024 06:32 AM

மதுரை: உலகப் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி இன்று(ஜன.,16) விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இதில் 14 காளைகளை அடக்கி பிரபாகரன் என்பவர் கார் பரிசாக வென்றார்.
நேற்று (ஜன.,15) பொங்கல் தினத்தை முன்னிட்டு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி சிறப்பாக நடந்து முடிந்தது. இதில் சுமார் 900 மாடுகள் அவிழ்க்கப்பட்டன, 600 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.
இந்த நிலையில் மாட்டு பொங்கல் தினமான இன்று,மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடந்தது. பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி துவக்கி வைத்தார். கலெக்டர் சங்கீதா, எம்.எல்.ஏ.க்கள் வெங்கடேசன், பூமிநாதன் கலந்து கொண்டனர். போட்டி துவங்குவதற்கு முன்பாக ஆன்லைன் டோக்கன் பெற்ற மாடுபிடி வீரர்கள், காளைகளுக்கு மறு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. பரிசோதனைக்கு பின்னர் ஜல்லிக்கட்டுக்கு அனுமதிக்கப்பட்டனர்.
பாலமேடு ஜல்லிக்கட்டில் பங்கேற்க 1000 காளைகளுக்கும், 700 மாடுபிடி வீரர்களுக்கும் டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. மாடுபிடி வீரர்களின் உறுதி மொழி ஏற்புக்கு பிறகு ஜல்லிக்கட்டு துவங்கியது. முதலில் 6 கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
8 காளைகள்
10ம் சுற்றின் முடிவில் 840 மாடுகள் அவிழ்க்கப்பட்டது. இதில் பொதும்பு பகுதியை சேர்ந்த பிரபாகரன் 14 காளைகளை அடக்கி முதலிடம் பெற்று கார் பரிசாக பெற்றார். சின்னப்பட்டியை சேர்ந்த தமிழரசன் 10 காளைகளை அடக்கி 2ம் இடத்தையும் கொந்தகையை சேர்ந்த பாண்டீஸ்வரன் தலா 8 காளைகளை அடக்கி 3ம் இடத்தையும் பிடித்தனர்.
கார், பைக் பரிசு
2வது இடம் பிடித்த தமிழரசனுக்கு அப்பாச்சி பைக் பரிசாக அளிக்கப்பட இருக்கிறது. அதேபோல், சிறப்பாக விளையாடிய புதுக்கோட்டையைச் சேர்ந்த சின்னக்கருப்பு என்ற காளைக்கு கார் பரிசாக அளிக்கப்பட்டது.
40 பேர் காயம்
9 சுற்றுகள் முடிவில் மாடுபிடி வீரர்கள் 14 பேர், மாட்டின் உரிமையாளர்கள் 12 பேர், பார்வையாளர்கள் 9 பேர், காவலர்கள் 3 பேர் என மொத்தம் 40 பேர் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 8 பேர் படுகாயமடைந்தனர்
தகுதி நீக்கம்
ஜல்லிக்கட்டில் 15 காளைகளும், மது அருந்தியது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக 32 வீரர்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.
டிஎஸ்பி காயம்
ஜல்லிக்கட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த மதுரை குற்றப்பிரிவு டிஎஸ்பி விஜயராஜன் காயமடைந்து முதலுதவி மையத்தில் சிகிச்சை பெற்றார்.