ADDED : ஜன 19, 2024 11:31 PM

பழநி:பழநி முருகன் கோயில் தைப்பூச திருவிழா நேற்று பெரிய நாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது.
பழநி முருகன் கோயில் நிர்வாகத்தில் செயல்பட்டு வரும் கிழக்கு ரத வீதியில் உள்ள பெரியநாயகி கோயிலில் கொடிகட்டி மண்டபத்தில் கொடிக்கம்பத்திற்கு சிறப்பு பூஜை செய்ய, மங்கல இசை, பக்தர்களின் 'அரோகரா' கோஷத்துடன் நேற்று காலை 7:56 மணிக்கு தைப்பூச திருவிழா கொடியேற்றம் நடந்தது.
கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து, உதவி கமிஷனர் லட்சுமி, டி.எஸ்.பி., சுப்பையா, சித்தநாதன் சன்ஸ் சிவனேசன்,பழனிவேல், ராகவன், கந்த விலாஸ் செல்வகுமார், கண்டத் கிராண்ட் ஹரிஹர முத்து அய்யர், சாய் மருத்துவமனை சுப்புராஜ் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவில் தினமும் இரவு 7:00 மணிக்கு பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடக்கிறது.
ஜன.24 இரவு 7:00 மணிக்கு வள்ளி, தெய்வ நாயகி அம்மன் சமேத முத்துக்குமார சுவாமி திருக்கல்யாணம், இரவு 9:00 மணிக்கு வெள்ளி ரதத்தில் சுவாமி புறப்பாடு நடக்கிறது.
தைப்பூச தினமான ஜன. 25 மாலை 4:30 மணிக்கு தேரோட்டம், ஜன.28 இரவு 7:00 மணிக்கு தெப்பத்தேரோட்டம் நடக்கிறது. அன்று இரவு 11:00 மணிக்கு கொடி இறக்குதலுடன் திருவிழா நிறைவு பெறும்.