அவசியமற்ற பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு அரசு மீது பழனிசாமி குற்றச்சாட்டு
அவசியமற்ற பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு அரசு மீது பழனிசாமி குற்றச்சாட்டு
ADDED : நவ 09, 2024 02:49 AM
சென்னை:'மக்கள் நலத் திட்டங்களுக்கான மூலதனச் செலவுகளை செய்யாமல், கருணாநிதி பெயரில் அவசியமற்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார்.
அவரது அறிக்கை:
ஜெயலலிதா ஆட்சியில், மக்கள் நலனுக்காக துவக்கப்பட்ட திட்டங்களுக்கு, தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற, 42 மாதங்களில், போதிய நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் ஒன்றியம், கூனிமேடு கிராமத்தில் இருந்து, தினமும் 60 எம்.எல்.டி., கடல் நீரை குடிநீராக்கும், 1,500 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டம் கைவிடப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம், அழகன்குப்பம் பக்கிங்ஹாம் கால்வாயிலும், ஆலம்பராகோட்டை அருகிலும், 235 கோடி ரூபாயில், மீன்பிடித் துறைமுகம் அமைக்கும் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரத்தில் ஜெயலலிதா பல்கலை ரத்து செய்யப்பட்டுள்ளது. அத்திக்கடவு - அவினாசி திட்டம், காவிரி உபரி நீரை 100 ஏரிகளில் நிரப்பும் திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை.
தென்காசி - ஜம்பு நதி மேல்மட்டக் கால்வாய் திட்டப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. திருநெல்வேலி இரட்டை குளம் முதல் ஊத்துமலை வரை, கால்வாய் பணிக்கு நிதி ஒதுக்கவில்லை. மதுராந்தகம் ஏரியை துார் வாரும் பணி, மூன்று ஆண்டுகளாக தொய்வில் உள்ளது.
இப்படி விவசாயிகள், பொதுமக்கள் என அனைவருக்கும் பயன்படும் திட்டங்களை, தி.மு.க., அரசு கிடப்பில் போட்டுள்ளது. மக்கள் நலத் திட்டங்களுக்கான மூலதன செலவுகளை செய்யாமல், அத்தியாவசியமற்ற செலவுகளை, ஸ்டாலின் அரசு செய்கிறது.
கருணாநிதி பெயரில் அவசியமற்ற பணிகள், மாநிலம் முழுதும் மேற்கொள்ளப்படுகின்றன.
சென்னை முட்டுக்காட்டில் 5 லட்சம் சதுர அடியில் 487 கோடி ரூபாயில், கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைக்க, அரசு 'டெண்டர்' கோரியுள்ளது. பல ஆண்டுகளாக விவசாயிகள், நதி நீர் இணைப்புக்காக போராட்டம் நடத்தி வரும் நிலையில், தி.மு.க., அரசு அதில் கவனம் செலுத்தாமல், பன்னாட்டு அரங்கம் கட்ட முனைப்பு காட்டுவது ஏன்?
உள்நாட்டு நதி நீர் இணைப்பு திட்டங்களை, 10 ஆண்டுகளில் செயல்படுத்தாவிட்டால், பல மாவட்டங்கள், வறட்சியால் பாதிக்கப்படும் என, ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின், அவரது தந்தை பெயரை, அரசு கட்டடங்களுக்கு வைக்க வேண்டும் என்றால், அவரது அறக்கட்டளை சார்பில், அப்பணிகளை செய்யலாம். போதிய நிதி இல்லாமல், மக்கள் நலத் திட்டங்கள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு தேவையான நிதியை ஒதுக்க வேண்டும்.