ADDED : நவ 06, 2024 07:46 PM
சென்னை:'கடந்த 41 மாதங்களாக, சீரழிந்து கிடக்கும் மருத்துவத் துறை குறித்து, எத்தனையோ முறை எடுத்துரைத்தும், தி.மு.க., அரசு அலட்சியத்துடன் செயல்படுவது வேதனைக்குரியது' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழகம் முழுதும், டெங்கு மற்றும் விஷக் காய்ச்சல் பரவி வருகிறது. எனவே, மாநிலம் முழுதும், காய்ச்சல் முகாம்கள், ரத்தப் பரிசோதனை முகாம்கள் நடத்த வேண்டும். வீடு வீடாக சென்று, காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனரா, பழைய டயர்கள், பாத்திரம் போன்றவற்றில், மழை நீர் தேங்காமல் உள்ளதா என்பதை, கண்காணிக்க வேண்டும்.
கொசு மருந்து தெளிக்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், போதிய அளவு மருந்துகளை, இருப்பு வைக்க வேண்டும் என, தி.மு.க., அரசை பலமுறை வலியுறுத்தி உள்ளேன். ஆனால், அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால், டெங்கு காய்ச்சலுக்கு, சிறுமி ஒருவர் இறந்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம், தேவராஜபுரம் கிராமத்தை சேர்ந்த, ராஜகுரு - அமுல் தம்பதியினரின், 6 வயது இளைய மகள் யாத்திகா, டெங்கு காய்ச்சலால் இறந்தது, வேதனை அளிக்கிறது. இனியாவது, தி.மு.க., அரசின் சுகாதாரத் துறை, தமிழகம் முழுதும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.