டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் ஸ்டாலின் நாடகம் பழனிசாமி குற்றச்சாட்டு
டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் ஸ்டாலின் நாடகம் பழனிசாமி குற்றச்சாட்டு
ADDED : நவ 30, 2024 12:36 AM

ஓமலுார்: சேலம் மாவட்டம், ஓமலுார் அருகே, அ.தி.மு.க., அலுவலகத்தில், அ.தி.மு.க., பொதுச்செயலர், பழனிசாமி அளித்த பேட்டி:
மதுரையில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். இச்சுரங்கம் அமைக்க, தி.மு.க., ஆட்சியில், 2023 அக்., 18ல், ஸ்டாலின், மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக, பத்திரிகையில் செய்தி வந்துள்ளது.
தற்போது இச்சுரங்கத்தை ரத்து செய்வதாக, மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருப்பதாக, ஸ்டாலின் நாடகம் ஆடுகிறார். இப்படித்தான் ஒவ்வொரு விஷயத்திலும் தி.மு.க.,வும் ஸ்டாலினும் மக்களை ஏமாற்றுகின்றனர். திருப்பூரில், 3 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். தினமும் தமிழகத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் தொல்லைகள் அதிகரித்துள்ளன.
அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் ஒருமுறை கூட சொத்து வரியை உயர்த்தவில்லை. மக்களுக்கு எவ்விதத்திலும் சிரமம் கொடுக்கக்கூடாது என்பதற்காகவே, சிரமத்திற்கு இடையிலும் சொத்து வரியை உயர்த்தாமல் பார்த்துக் கொண்டோம்.
ஆனால், தி.மு.க., தேர்தல் அறிக்கையில் சொத்து வரியை உயர்த்த மாட்டோம் என வாக்குறுதி அளித்திருந்தது.
வழக்கம் போல் மக்களை ஏமாற்றி சொத்து வரியையும் பல மடங்கு உயர்த்தி விட்டனர். அதை ரத்து செய்ய வேண்டும். முல்லை - பெரியாறு அணை பாசனப் பகுதியை, பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

