தமிழக பா.ஜ., தேர்தல் பொறுப்பாளராக கோயலை நியமிக்க வைத்த பழனிசாமி
தமிழக பா.ஜ., தேர்தல் பொறுப்பாளராக கோயலை நியமிக்க வைத்த பழனிசாமி
UPDATED : டிச 16, 2025 12:46 AM
ADDED : டிச 16, 2025 12:45 AM

தமிழக பா.ஜ., தேர்தல் பொறுப்பாளராக இருந்த பைஜயந்த் பாண்டாவை மாற்றிவிட்டு, மத்திய தொழில் மற்றும் வர்த்தக துறை அமைச்சர் பியுஷ் கோயலை, அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நியமித்துள்ளார். இந்த மாற்றம், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியின் விருப்பத்தில் நடந்திருப்பதாக கூறப்படுகிறது.
பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:
அ.தி.மு.க., வுடன் தொகுதி பங்கீடு பேச்சு நடத்தவும், வேட்பாளர்கள் தேர்வு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளவும், தமிழக பா.ஜ., தேர்தல் பொறுப்பாளராக, கட்சியின் தேசிய துணைத் தலைவரும், எம்.பி.,யுமான பைஜயந்த் பாண்டாவை, கடந்த செப்., 25ம் தேதி நட்டா நியமித்தார்.
ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்த பைஜயந்த் பாண்டா, சென்னையில் பழனிசாமி, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ஆகியோரை சந்தித்து பேசினார். இந்நிலையில், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், சில தினங்களுக்கு முன் பழனிசாமியை சந்தித்தார்.
ஒன்றரை மணி நேரம் நடந்த பேச்சில், 'மத்திய அமைச்சர் பியுஷ் கோயலுக்கு, தமிழக அரசியல் நிலவரம் நன்கு தெரியும்; எனக்கு மட்டுமின்றி, முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோருடன் நல்ல நட்பில் உள்ளார்.
'கோயலை தேர்தல் பொறுப்பாளராக நியமித்தால், தொகுதி பங்கீடு சுமுகமாக இருக்கும்' என, பழனிசாமி தரப்பில் கூறியதாக தெரிகிறது. இதை டில்லியில் நேற்று முன்தினம் அமித் ஷாவிடம், நயினார் நாகேந்திரன் கூறியிருக்கிறார்.
அதையடுத்தே தமிழக பா.ஜ., தேர்தல் பொறுப்பாளராக பியுஷ் கோயல் நியமிக்கப்பட்டு உள்ளார். இணை பொறுப்பாளராக மத்திய இணை அமைச்சர் முரளிதர் மோகல் ஏற்கனவே உள்ள நிலையில், மற்றொரு இணை பொறுப்பாளராக, இணை அமைச்சர் அர்ஜுன்ராம் மெக்வாலும் நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.
- நமது நிருபர் -

