ராமதாஸ், பிரேமலதா, பன்னீருக்கு தடை போடுகிறார் பழனிசாமி
ராமதாஸ், பிரேமலதா, பன்னீருக்கு தடை போடுகிறார் பழனிசாமி
ADDED : ஜன 29, 2026 12:24 AM

தே.மு.தி.க.,வையும், ராமதாஸ், பன்னீர்செல்வம் உள்ளிட்டோரையும் கூட்டணியில் சேர்த்தால், தங்களுக்கான பங்கு குறையும் என்பதால், அவர்களை சேர்ப்பதற்கு, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தடை போடுவதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக, தமிழக பா.ஜ., மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது: 167 தொகுதிகள் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில், பா.ஜ.,வுக்கு 30; அ.ம.மு.க.,வுக்கு எட்டு; பா.ம.க.,வுக்கு 18; த.மா.கா.,வுக்கு ஐந்து; இதர கட்சிகளுக்கு தலா ஒன்று என, தொகுதிகளை ஒதுக்க பேச்சு நடந்து வருகிறது. இதில், கடைசி நேரத்தில் மாற்றம் ஏற்படலாம்.
ஆனால், தற்போதைய நிலவரப்படி, 67 'சீட்' வரை கூட்டணிகளுக்கு செல்லும் நிலை இருக்கிறது. அதன்படி, மீதமுள்ள 167 தொகுதிகளில் தான் அ.தி.மு.க., போட்டியிட முடியும். இது, கடந்த தேர்தலை விட 12 சீட் குறைவு.
அதேபோல, கடந்த முறை கூட்டணி கட்சியினர் பலரும், இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட விரும்பியதால், 191 இடங்களில் அ.தி.மு.க., தரப்பில் போட்டியிட முடிந்தது.
இம்முறை, த.மா.கா., தனி சின்னத்திலும்; கடந்த முறை இரட்டை இலையில் போட்டியிட்டு தோல்வியடைந்த கட்சிகள், பா.ஜ.,வின் தாமரை சின்னத்திலும் போட்டியிட விரும்புகின்றன.
இந்நிலையில், தே.மு.தி.க.,வையும், ராமதாசின் பா.ம.க.,வையும், பன்னீர்செல்வம் அணியையும் கூட்டணிக்குள் கொண்டு வந்தால், அவர்களுக்கும் இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும்.
அதனால், அ.தி.மு.க., போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை இன்னும் குறையும். அதோடு, அவர்கள் அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணிக்குள் வந்தாலும், அ.தி.மு.க.,வுக்கு தனிப்பட்ட ரீதியில் எந்த லாபமும் இல்லை என யோசிக்கிறார் பழனிசாமி. அதனால், அவர்கள் கூட்டணிக்குள் இணைவதை விரும்பாமல், பா.ஜ., எடுக்கும் முயற்சிகளுக்கு பழனிசாமி தடை போடுகிறார்.
ஆனால், பழனிசாமியின் கருத்தை, பா.ஜ., தரப்பு ஏற்க மறுக்கிறது. 'தற்போதைய சூழலில் வலுவான கூட்டணியாக அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி இருந்தாலும், அது, தேர்தல் வெற்றிக்கு போதுமானதாக இல்லை.
'கூட்டணி இன்னும் வலுப்பெற வேண்டும். அதற்கு, சின்ன சின்ன கட்சிகளாக இருந்தாலும், அவர்களையும் கூட்டணிக்குள் இணைத்துக் கொள்வது அவசியம். ராமதாஸ், பிரேமலதா, பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை கட்டாயம் கூட்டணிக்குள் இணைத்தாக வேண்டும்' என பா.ஜ., தரப்பில் சொல்லப்படுகிறது.
அதிருப்தி
அதற்காக, பழனிசாமிக்கு கொடுக்கப்படும் அழுத்தத்தை, அவர் கொஞ்சம் கூட கண்டுகொள்ளவில்லை. இனி, கூட்டணிக்குள் யாரையும் சேர்க்க மாட்டேன் என பழனிசாமி பிடிவாதமாக இருக்கிறார்.
'ஒருவேளை பன்னீர்செல்வத்தை கூட்டணிக்குள் ஏற்றுக் கொண்டாலும், அவரோ, அவருடைய ஆதரவாளர்களோ போட்டியிட இரட்டை இலை சின்னத்தை தர மாட்டோம். 'தேவையானால், ஏற்கனவே லோக்சபா தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் பன்னீர்செல்வம் போட்டியிட்ட பலாப்பழம் சின்னத்தில் போட்டியிடட்டும்' என, பழனிசாமி நிபந்தனை விதிக்கிறார்.
கூட்டணி நலனுக்காக, பழனிசாமி கொஞ்சங்கூட இறங்கி வராமல் இருப்பது, பா.ஜ., மேலிடத்தை அதிருப்தி அடைய வைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

