பழனிசாமி இன்னும் பாடம் கற்கவில்லை சுயநலத்திற்காக கட்சியை அழிக்கிறார்: பன்னீர்..
பழனிசாமி இன்னும் பாடம் கற்கவில்லை சுயநலத்திற்காக கட்சியை அழிக்கிறார்: பன்னீர்..
ADDED : டிச 08, 2024 02:22 AM

சென்னை: ''அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி இன்னும் பாடம் கற்காமல், அவரது சுயநலத்திற்காக கட்சியை அழித்து வருகிறார்,'' என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கூறினார்.
சென்னை எழும்பூரில், 'அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு' கூட்டம் நேற்று நடந்தது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை, 10 நாட்களில் முடிப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்து, 42 மாதங்களாகியும் முடிக்காமல் இருக்கும் தி.மு.க., அரசுக்கு கண்டனம் தெரிவிப்பது உள்ளிட்ட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், பன்னீர்செல்வம் பேசியதாவது:
லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட என்னை தோற்கடிக்க, ஆறு பன்னீர்செல்வங்களை நிறுத்தினர். இவற்றையெல்லாம் கடந்து வந்தோம். அங்கு, 10.5 லட்சம் ஓட்டுகள் பதிவான நிலையில், எங்கள் போராட்டம் நியாயமானது என மக்கள் புரிந்து, 3.42 லட்சம் ஓட்டுகளை எனக்கு அளித்தனர்.
ஆனால், பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க., படுதோல்வி அடைந்து, 13 தொகுதிகளில் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
வெற்றி பெற்ற தேனியில், 'டிபாசிட்' கூட கிடைக்கவில்லை. இவ்வளவு நடந்தும், பழனிசாமி பாடம் கற்கவில்லை. தன் சுயநலத்திற்காக கட்சியை அழித்து வருகிறார்.
ஒரு தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தால், அடுத்த தேர்தலில் உறுதியாக வெற்றி பெறும் என்ற நிலை, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் கட்சிக்கு இருந்தது. இந்த இயக்கத்தை யாராலும் வெற்றிபெற முடியாத அளவுக்கு, அவர்கள் வளர்த்தனர்.
கடந்த 1989 வரை, அ.தி.மு.க.,வில் உறுப்பினராகக்கூட இல்லாமல் இருந்தவர் பழனிசாமி. அவர் பேசுவது அனைத்தும் பொய். நான் என்ன தவறு செய்தேன் என்ற கேள்விக்கு, அவரிடம் எந்த பதிலும் இல்லை.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆத்மா கட்சியை வழிநடத்தி வருகிறது. தொண்டர்களுக்கான கட்சியை, தொண்டர்கள் தான் வழிநடத்த வேண்டும் என, தொடர்ந்து குரல் கொடுப்பேன்.
அறிவில்லாமல் ஏதாவது செய்துவிட்டு, பின்வாங்குவதை தான் பழனிசாமி செய்து வருகிறார். பழனிசாமி இல்லாத அ.தி.மு.க., வேண்டும் என, தொண்டர்கள் சொல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. பழனிசாமியின் சர்வாதிகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் காலம் நெருங்கி விட்டது.
ஜனவரி மாதம் அனைத்து மாவட்டங்களுக்கும், அ.தி.மு.க., தொண்டர்கள் மீட்புக் குழுவின் தலைமை குழு சுற்றுப்பயணம் செல்லும்.
அதற்குள் பொறுப்பாளர்களை நியமித்து விடுங்கள். நம் அடுத்த மாநாடு, மதுரை, கோவையில் நடத்தப்படும். கடைசியாக, சென்னையில் பிரமாண்ட மாநாடு நடத்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் பேசியதாவது:
கட்சியின் பொதுச்செயலரை தொண்டர்கள் தான் தேர்வு செய்ய வேண்டும்; அந்த விதியை திருத்த யாருக்கும் அதிகாரம் இல்லை. தொண்டர்களின் உரிமையை அவர்களுக்கே வழங்க வேண்டும்.
அ.தி.மு.க., தொண்டர்கள் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட நினைக்கின்றனர். இலங்கையைக் காப்பாற்றினோம் எனக்கூறிய ராஜபக்சே குடும்பம், தற்போது ஊரில் நடமாட முடியவில்லை.
'ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு' என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.,வுமான வைத்திலிங்கம் பேசுகையில், ''வரும் பிப்ரவரி மாதத்திற்குள் அ.தி.மு.க., ஒன்றாக இணைந்து, 2026ல் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்.
''ஒன்றுபடவில்லை என்றால், எவ்வளவு பணம் இருந்தாலும், அரசியல் அநாதையாக நிற்க நேரிடும். யாரும் கவலைப்பட வேண்டாம். கஷ்டப்பட்டவர்களுக்கு நிச்சயம் பலன் கிடைக்கும்,'' என்றார்.