குறளி வித்தை காட்டி தொண்டர்களை பழனிசாமி ஏமாற்றுகிறார்: உதயநிதி
குறளி வித்தை காட்டி தொண்டர்களை பழனிசாமி ஏமாற்றுகிறார்: உதயநிதி
ADDED : நவ 11, 2025 05:19 AM

சென்னை: ''தேர்வுக்கு படிக்காமல் வந்த மாணவன், விடைத்தாளில் பிள்ளையார் சுழி மட்டும் போட்டு உட்கார்ந்து இருக்கிற மாதிரி பழனிசாமியின் நிலைமை இருக்கிறது,'' என துணை முதல்வர் உதயநிதி பேசினார்.
தி.மு.க., இளைஞரணி சார்பில், சென்னையில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி பேசியதாவது:
தி.மு.க., ஒரு சாதாரண அரசியல் கட்சியாக, அ.தி.மு.க., மாதிரி பத்தோடு பதினொன்றாக இருந்திருந்தால், அதை யாரும் அழிக்க வேண்டும் என முயற்சி செய்ய மாட்டார்கள்.
நாம் கொள்கை கூட்டம் என தெரிந்ததால் தான், நம்மை அழிக்க வருகின்றனர். குறிப்பாக, பாசிச சக்திகள், நம் கொள்கை கூட்டத்தின் மீது கை வைத்து பார்க்க முயற்சிக்கின்றன.
தொண்டர்களின் தியாகத்தால் தான், தி.மு.க., இன்றைக்கு ஒரு ஆல மரமாக வளர்ந்து நிற்கிறது. அதனால் தான், பெரிய பெரிய புயலால் கூட வீழ்த்த முடியவில்லை.
அரசியலில் சில பேர், அடித்தளமே இல்லாமல் உள்ளே வர முயற்சிக்கின்றனர்; ஆள வேண்டும் என்றும் விரும்புகின்றனர்.
கண்காட்சிகளில் பார்த்திருப்பீர்கள். அங்கே தாஜ் மஹால் மாதிரி 'செட்' போடுவர்; 'ஈபிள் டவர்' மாதிரி அரங்கம் போட்டிருப்பர். கண்காட்சிக்கு செல்கிறவர்கள், அந்த செட்டுக்கு முன் நின்று புகைப்படம் எடுப்பர்.
அவை வெறும் அட்டை தான், அதற்கு எந்தவிதமான அஸ்திவாரமோ; கொள்கையோ கிடையாது. சும்மா தட்டுனா கீழே விழுந்து விடும்.
அ.தி.மு.க., தொண்டர்களை, பழனிசாமி தொடர்ந்து ஏமாற்றி வருகிறார். சில நாட்களுக்கு முன், 'ஒரு பிரமாண்டமான கட்சி, நம் கூட்டணிக்கு வரப் போகிறது' என்றார்.
அ.தி.மு.க., பிரசார கூட்டத்தில், இன்னொரு கட்சியின் கொடியை அவர்களே பிடித்து ஆட்டிக் கொண்டு, 'பார்த்தீர்களா கொடி பறக்குது; பிள்ளையார் சுழி போட்டாச்சு' என, குறளி வித்தை காட்டினார்.
தேர்வுக்கு படிக்காமல் வந்த மாணவன், விடைத்தாளில் பிள்ளையார் சுழி மட்டும் போட்டு உட்கார்ந்து இருக்கிற மாதிரி, இப்போது பழனிசாமியின் நிலைமை இருக்கிறது.
படிக்காதவர்கள் ஒரேயொரு பிள்ளையார் சுழி தான் போடுவர்; ஒன்றும் எழுதாமல், எல்லாவற்றையும் மேலே இருப்பவன் பார்த்துக் கொள்வான் என விட்டு விடுவர். அந்த நிலைமையில் தான் பழனிசாமி இருக்கிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.

