சினிமாவில் ஓய்வுபெறும் காலத்தில் கட்சி நடிகர் விஜயை வெளுக்கும் பழனிசாமி
சினிமாவில் ஓய்வுபெறும் காலத்தில் கட்சி நடிகர் விஜயை வெளுக்கும் பழனிசாமி
ADDED : ஆக 22, 2025 02:31 AM

காஞ்சிபுரம்: ''ஓய்வுபெறும் காலத்தில் ஒருவர் அரசியல் கட்சி துவங்கி உள்ளார். அவர் அ.தி.மு.க.,வை விமர்சித்தால், மக்களே அதை ஏற்க மாட்டார்கள்,'' என பழனிசாமி பேசினார்.
தமிழகம் முழுதும் பிரசார சுற்றுப்பயணத்தில் இருக்கும் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, நேற்று காஞ்சிபுரத்தில் பேசியதாவது:
தீயசக்தி தி.மு.க.,வை வீழ்த்தவே, அ.தி.மு.க.,வை எம்.ஜி.ஆர்., தொடங்கினார். தமிழகத்தில் யார் புதிய கட்சி துவங்கினாலும், அ.தி.மு.க., தலைவர்களின் பெயரைச் சொல்லித்தான் ஆக வேண்டும்.
சிலர், அ.தி.மு.க., யார் கையில் இருக்கிறது என்று கேட்கின்றனர். அவர்களுக்கு அரசியல் தெரியாது. அதனால், இப்படியெல்லாம் கேட்கின்றனர். இதுகூட தெரியாமல் கட்சிக்குத் தலைவராக எப்படி இருக்க முடியும்? நாட்டில் என்ன நடக்கிறது என்பதே அவர்களுக்கு தெரியவில்லை.
ஒரு கட்சி ஆரம்பித்தவுடன் ஆட்சியை பிடித்து விட முடியாது. செடி உடனே மரமாகி விடாது. எடுத்தவுடனே எந்த இயக்கமும் மக்களுக்கு நன்மை செய்துவிட முடியாது. எம்.ஜி.ஆர்., கட்சி துவங்கி, ஐந்து ஆண்டு காலம் தன்னுடைய உழைப்பைக் கொடுத்து பணியாற்றினார். பின் தான், ஆட்சியைப் பிடித்தார்.
ஜெயலலிதாவும் அப்படித்தான். எடுத்ததுமே முதல்வர் ஆகி விடவில்லை. மக்களுக்கு உழைத்து தான் முதல்வரானார். தமிழகம் இந்தளவு உயர்ந்திருப்பதற்கு, 31 ஆண்டுகள் ஆட்சி செய்து மக்களுக்காக அ.தி.மு.க., உழைத்ததுதான் காரணம்.
எங்கள் ஆட்சியில் 10 ஆண்டுகளில் 17 அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை கொண்டுவந்து வரலாற்று சாதனை படைத்தோம். 67 கலை அறிவியல் கல்லுாரி, 21 பாலிடெக்னிக் கல்லுாரி என நிறைய கல்லுாரிகளைத் திறந்தோம்.
அவர்கள் வந்து தான் மக்களைக் காப்பாற்றப்போவது போல சினிமாக்காரர் ஒருவர், அடுக்குமொழியில் பேசி வருகிறார். யாரை சொல்கிறேன் என்பது சொல்லாமலேயே அனைவருக்கும் புரியும்.
திரைப்படங்களில் நடித்து அதன் வாயிலாக வருமானம் பெற்று, ஓய்வுபெறும் காலத்தில் ஒருவர் அரசியல் கட்சி துவங்கி உள்ளார். அவர் அ.தி.மு.க.,வை விமர்சித்தால், மக்களே அதை ஏற்க மாட்டார்கள்.
கட்சியில் கிளை கழகச் செயலராக பணியாற்றி, படிப்படியாக உயர்ந்து, இன்று மக்கள் முன் நிற்கிறேன் என்றால், உழைப்பால் விளைந்தது. ஆனால், சிலர் உழைப்பு எதுவும் இல்லாமலேயே வெற்றி பெற்று விடலாம் என நினைக்கின்றனர்.
அது நடக்காது; அப்படி வந்தாலும் நிலைக்காது. தி.மு.க.,வை வீழ்த்தும் சக்தி உள்ள ஒரே கட்சி, அ.தி.மு.க., மட்டுமே. பொன்விழா கண்ட இந்த கட்சியை, எந்தக் கொம்பனாலும் தொட்டுக்கூடப் பார்க்க முடியாது; விமர்சிக்கவும் யாருக்கும் தகுதியில்லை. வரும் தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பெற்று நிச்சயம் ஆட்சி அமைக்கும்.
ஆன்லைன் சூதாட்டத்தைத் தடுக்க, அ.தி.மு.க., ஆட்சியில் தான் சட்டம் கொண்டு வந்தோம். ஆனால் நீதிமன்றம் சென்று தடையாணை பெற்று விட்டனர். இன்றைக்கு மத்திய அரசு ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதித்துள்ளதற்கு அன்று அ.தி.மு.க., எடுத்த முன்னெடுப்பே காரணம்.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் மிகப்பெரிய ஊழல் நடந்திருக்கிறது, இதை தி.மு.க., கவுன்சிலர்களே சொல்கின்றனர். தி.மு.க., மேயர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். இப்படித்தான், எல்லா மாநகராட்சிகளிலும் உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
காஞ்சிபுரத்தில் நேற்று பிரசார சுற்றுப்பயணத்தில் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பேசினார். உடன், அ.தி.மு.க., நிர்வாகிகள்.