செங்கோட்டையன் கருத்துக்கு மதுரையில் பழனிசாமி பதில்
செங்கோட்டையன் கருத்துக்கு மதுரையில் பழனிசாமி பதில்
ADDED : நவ 28, 2025 08:20 AM

மதுரை: ''தான் மட்டும் தான் இருப்பேன் என்று நினைத்தால் ஆண்டவன் தண்டிப்பார்,'' என, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசியது குறித்து மதுரையில் கருத்து தெரிவித்த அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி, ''அவர் தனது கருத்தை பேசுகிறார். அவர் அ.தி.மு.க.,வில் இல்லை,'' என்றார்.
மதுரையில் நடந்த ஒரு திருமண விழாவில் பங்கேற்பதற்காக பழனிசாமி நேற்று காலை விமான நிலையம் வந்தார். மாவட்ட செயலாளர்கள் செல்லுார் ராஜூ, ராஜன்செல்லப்பா, உதயகுமார் உள்ளிட்டோர் வரவேற்றனர். விரகனுார் ரிங் ரோடு சந்திப்பில் மருத்துவரணி இணைச்செயலாளர் டாக்டர் சரவணன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின் திருமண நிகழ்ச்சியை முடித்துவிட்டு புறப்பட்ட பழனிசாமியிடம், 'தான் மட்டும் தான் ஆள வேண்டுமா. மற்றவர்கள் ஆள வேண்டும் என்று நினைக்கக்கூடாதா. தான் மட்டும் தான் இருப்பேன் என்று நினைத்தால் ஆண்டவன் தண்டிப்பார் என செங்கோட்டையன் கூறியுள்ளாரே' என நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு பழனிசாமி கூறியதாவது: அது அவருடைய கருத்து. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து உள்ளது. உங்களுக்கும் எனக்கும் ஒரு கருத்து உள்ளது. கருத்து சுதந்திரம் உள்ள ஜனநாயக நாடு இது. அவர் அ.தி.மு.க.,வில் இல்லை. அவரைப் பற்றி கருத்து சொல்வதற்கு ஒன்றுமில்லை என்றார்.

