அ.தி.மு.க.,வை பா.ஜ.,வுடன் பழனிசாமி இணைத்து விடுவார்: உதயநிதி ஆருடம்
அ.தி.மு.க.,வை பா.ஜ.,வுடன் பழனிசாமி இணைத்து விடுவார்: உதயநிதி ஆருடம்
ADDED : நவ 18, 2024 12:51 AM

சென்னை: “வருமான வரித்துறை இன்னொரு முறை சோதனை நடத்தினால், பழனிசாமி, அ.தி.மு.க.,வை பா.ஜ.,வுடன் இணைத்து விடுவார்,” என, துணை முதல்வர் உதயநிதி தெரிவித்தார்.
சென்னை வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில், 48 ஜோடிகளுக்கான திருமண விழா, திருவொற்றியூர் சுங்கச்சாவடியில் நேற்று நடந்தது. தமிழக துணை முதல்வர் உதயநிதி திருமணத்தை நடத்தி வைத்தார். மணமக்களுக்கு, தலா 25,000 ரூபாய் மொய், 1.5 லட்சம் ரூபாயில், கட்டில், மெத்தை, பீரோ உள்ளிட்ட, 30 வகையான பொருட்கள் அடங்கிய சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன.
திருமணத்தை நடத்தி வைத்து, துணை முதல்வர் உதயநிதி பேசியதாவது:
தமிழக அரசு, ஏராளமான மக்கள் நலத் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. அத்திட்டங்களெல்லாம் மக்களை சென்றடைந்து, அவர்கள் பயன் பெற்றதும், திட்டங்களை செயல்படுத்தும் தி.மு.க., அரசைப் பார்த்து கொண்டாடுகின்றனர். இதைக் காணும் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமிக்கு கோபம் வருகிறது. குறிப்பாக, எல்லா திட்டங்களுக்கும் கருணாநிதி பெயர் ஏன் வைக்கிறீர்கள் என்று கேட்கிறார். தன் 96வது வயது வரை தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்காகவும் ஓயாது உழைத்தவர் கருணாநிதி. சின்னக் குழந்தைக்கும் இது தெரியும். அப்படிப்பட்டவர் பெயரை திட்டங்களுக்கு சூட்டாமல், வேறு யார் பெயரை சூட்டுவது?
அரசின் திட்டங்களுக்கு, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பெயர் வைத்தால்கூட, பழனிசாமி ஏற்றுக் கொள்ள மாட்டார். காரணம், அவருடைய ஆதர்ஷ தலைவர்களான மோடி, அமித் ஷா பெயரை சூட்ட தான் அவர் விரும்புவார். அப்படி செய்தால் மட்டுமே அவர் அதை ஏற்றுக் கொள்வார்.
மூன்று மாதங்களுக்கு முன், 'எந்த கால கட்டத்திலும், பா.ஜ., கூட்டணியில் அ.தி.மு.க., இருக்காது' என்றார். சமீபத்தில், சேலத்தில் பழனிசாமியின் நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது. சோதனை நடந்த மறுநாளே, 'கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் பேசிக் கொள்ளலாம்' என்கிறார். இன்னும் ஒருமுறை வருமான வரித்துறை சோதனை நடத்தினால் போதும். பழனிசாமி, அ.தி.மு.க.,வை பா.ஜ.,வுடன் இணைத்து விடுவார். அந்த நிலைமையில் தான் அ.தி.மு.க., உள்ளது.
வரும் 2026ல் நடக்கவிருக்கும் சட்டசபைத் தேர்தலில் குறைந்தபட்சம், 200 தொகுதிகளில் தி.மு.க., வெற்றி பெற வேண்டும். ஏழாவது முறையாக, தி.மு.க., ஆட்சியில் அமர வேண்டும். அதனால், தி.மு.க., தொண்டர்கள் ஒவ்வொருவரும், நம் ஆட்சியில் நிறைவேற்றும் திட்டங்கள் குறித்து, வீடு வீடாகச் சென்று மக்களுக்கு எடுத்து கூறுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.