சொத்து விபரம் மறைப்பு பழனிசாமி வழக்கு: ஏப்., 14ல் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை
சொத்து விபரம் மறைப்பு பழனிசாமி வழக்கு: ஏப்., 14ல் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை
UPDATED : மார் 17, 2026 04:30 PM
ADDED : மார் 17, 2026 04:05 AM

- டில்லி சிறப்பு நிருபர் -
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, வேட்பு மனுவில் சொத்து விபரங்களை மறைத்தது தொடர்பான வழக்கை, ஏப்., 14ல் விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கடந்த 2021 சட்டசபை தேர்தலில் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட பழனிசாமி, தன் வேட்பு மனுவில் சொத்து விபரங்களை மறைத்து பொய் தகவல்களை தெரிவித்ததாக மிலானி என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சேலம் நீதிமன்றம், 'விசாரணை நடத்தி, முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்யலாம்' என காவல் துறைக்கு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, பழனிசாமி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
எனவே, உச்ச நீதிமன்றத்தில், அவர் மேல்முறையீடு செய்தார். இதையடுத்து, விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. பின், இந்த வழக்கு, விசாரணைக்கு எடுக்கப்படாமல் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், பழனிசாமியின் மேல்முறையீட்டு மனுவை விரைவாக விசாரணைக்கு எடுக்கக்கோரி, உச்ச நீதிமன்றத்தில், நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வில் மிலானி தரப்பில் முறையிடப்பட்டது.
அதை ஏற்ற உச்ச நீதிமன்ற அமர்வு, 'மனு மீதான விசாரணை, ஏப்ரல் 14ம் தேதி நடைபெறும்' என அறிவித்தது.

