ADDED : மே 21, 2025 05:45 AM

சென்னை: கடந்த தேர்தலில் இழந்த, முத்தரையர் சமுதாய ஓட்டுகளை மீண்டும் பெற, பெரும்பிடுகு முத்தரையர் சதய விழாவை சிறப்பாக கொண்டாட, அ.தி.மு.க.,வினருக்கு அக்கட்சி பொதுச்செயலர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை, கரூர், சிவகங்கை, பெரம்பலுார் மாவட்டங்களில், முத்தரையர் சமூகத்தினர் பெரும் எண்ணிக்கையில் உள்ளனர். சுமார் 30 சட்டசபை தொகுதிகளில், வெற்றி தோல்வியை தீர்மானிப்பவர்களாக, அச்சமுதாய மக்கள் உள்ளனர். கடந்த 1977 சட்டசபை தேர்தல் முதல், முத்தரையர் சமூகத்தினர், பெரும்பாலும் அ.தி.மு.க.,விற்கே ஓட்டளித்து வந்தனர்.
கடந்த 1989ல் அ.தி.மு.க., இரண்டாக பிளவுபட்டபோது, ஜெயலலிதா அணிக்கு, முத்தரையர் சமூகம் பெரும் ஆதரவளித்தது. அதனால், காங்கிரஸை பின்னுக்கு தள்ளி, ஜெயலலிதா எதிர்க்கட்சி தலைவரானார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, முத்தரையர் சமூக ஓட்டுகளை அ.தி.மு.க., இழந்தது. கடந்த 2021 சட்டசபை தேர்தலில், முத்தரையர் சமூகம் பெரும்பான்மையாக உள்ள தொகுதிகளில், ஒன்றில் கூட அ.தி.மு.க., கூட்டணிக்கு வெற்றி கிடைக்கவில்லை.
எனவே, வரும் 2026 சட்டசபை தேர்தலில், ஏற்கனவே இழந்த முத்தரையர் சமூக ஓட்டுகளை பெற, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக, வரும் 23ம் தேதி பெரும்பிடுகு முத்தரையர் 1350வது சதய விழாவை, சிறப்பாக கொண்டாட, அ.தி.மு.க.,வினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக, அவர் வெளியிட்ட அறிக்கை: பெரும்பிடுகு முத்தரையர், 1350வது சதய விழாவையொட்டி, வரும் 23ம் தேதி, திருச்சியில் உள்ள அவரது சிலைக்கு, அ.தி.மு.க., சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.