'அண்ணாந்து பார்த்து துப்புவது போல பேசும் பழனிசாமி'
'அண்ணாந்து பார்த்து துப்புவது போல பேசும் பழனிசாமி'
ADDED : டிச 06, 2024 06:50 AM

கிருஷ்ணகிரி : ''நீர்நிலை ஆக்கிரமிப்பு, வெள்ள பாதிப்பு ஆக்கிரமிப்பு பற்றி பழனிசாமி பேசுவது, அண்ணாந்து பார்த்து துப்புவது போன்றது,'' என, வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் கூறினார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தி.மு.க., பிரமுகர்களின் இல்ல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர் அளித்த பேட்டி:
'பெஞ்சல்' புயலால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 3 லட்சம் ஹெக்டேரில் வேளாண் பயிர்கள் மழைநீரால் சூழப்பட்டுள்ளன.
வேளாண் அதிகாரிகள் ஆய்வு நடத்தி, பாதிப்புகளை கணக்கெடுத்து வருகின்றனர். முடிவில், இது சற்று கூடலாம் அல்லது குறையலாம். வயல்களில் தேங்கிய நீரை வெளியேற்றும் பணியில் அந்தந்த மாவட்ட நிர்வாகம் முழுவேகத்தில் ஈடுபட்டுள்ளது.
நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு, வெள்ளத் தடுப்பு பணியில் மெத்தனம் என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பேசி வருவது, அண்ணாந்து பார்த்து துப்புவது போன்றது. ஏனெனில், தி.மு.க., ஆட்சிக்கு வந்து மூன்றரை ஆண்டுகள் தான் ஆகிறது.
அதற்கு முன், 10 ஆண்டுகள் ஆட்சி செய்தது, அ.தி.மு.க., தான். நீர்நிலைகளை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டதும் அப்போதுதான். அவற்றை அகற்ற நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகிறோம்.
வெள்ள பாதிப்புகள் குறித்து, மத்திய அரசு குழுவும் பார்வையிட்டு, ஆய்வை துவக்கி உள்ளது. பயிர் பாதிப்பு கணக்கெடுப்பு பணி முடிவில், நிவாரணம் குறித்து முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார்.
இவ்வாறு பன்னீர்செல்வம் கூறினார்.