பாம்பன் புதிய துாக்கு பாலம் இரண்டாம் முறையாக சோதனை
பாம்பன் புதிய துாக்கு பாலம் இரண்டாம் முறையாக சோதனை
ADDED : பிப் 09, 2025 01:27 AM

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழாவிற்காக நேற்று 2ம் கட்ட ஒத்திகையில் ரயில் பாலத்தை கப்பல், ரயில் இன்ஜின் பெட்டிகள் கடந்து சென்றன.
பாம்பன் கடலில் அமைத்த புதிய ரயில் பாலம் கட்டுமானப் பணி முடிந்த நிலையில் திறப்பு விழாவுக்கு காத்திருக்கிறது. இதனை விரைவில் பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். ஏற்கனவே ஜன.,31ல் பாலத்தின் திறப்பு விழாவுக்கான ஒத்திகை நடந்தது.
இரண்டாம் கட்டமாக நேற்று மீண்டும் பாம்பன் பழைய, புதிய ரயில் பாலத்தின் துாக்கு பாலங்கள் திறக்கப்பட்டதும் இந்திய கடலோர காவல் படையின் ரோந்து கப்பல் கடந்து சென்றது.
இதனைத் தொடர்ந்து துாக்கு பாலங்களை மூடியதும் மண்டபம் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து புறப்பட்ட சென்னை போர்ட் மெயில் ரயில் 22 காலிப்பெட்டிகளுடன் பாலத்தை கடந்து ராமேஸ்வரம் சென்றது.
இதனை பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் அமைத்த மேடையில் நின்றபடி மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீவஸ்தவா பார்வையிட்டார்.
திறப்பு விழாவின் போது பிரதமர் மோடி இந்திய ரோந்து கப்பலில் இருந்தபடி புதிய பாலத்தை பார்வையிடவும், ரயில்வே அமைச்சர், மத்திய அமைச்சர்கள் பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் அமைத்த மேடையில் நின்றபடி பார்வையிட வாய்ப்பு உள்ளதால் இந்த ஒத்திகை நடந்தது என ரயில்வே ஊழியர்கள் தெரிவித்தனர்.
பழைய பாலம் பலமிழந்தது
பாம்பன் பழைய ரயில் பாலம் பலமிழந்துள்ளதால் இதனை பயன்படுத்த முடியாது. இதுகுறித்து புதிய பாலம் திறப்பு விழாவுக்கு பின் முடிவு எடுக்கப்படும். திறப்பு விழா குறித்து ரயில்வே அமைச்சகம் அறிவிக்கும் என சரத் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார்.