ADDED : பிப் 23, 2024 02:18 AM
சென்னை: ''பஞ்சமி நிலம் தொடர்பான நடைமுறை மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது. இப்பிரச்னையில், மத்திய அரசுதான் நடவடிக்கை எடுக்க முடியும்,'' என, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
சட்டசபையில் நடந்த விவாதம்:
பா.ஜ., - வானதி: பட்டியலின மக்களுக்கான பஞ்சமி நிலம் தொடர்பான புதிய சட்டம் இயற்ற வேண்டும் என, ஏற்கனவே கோரிக்கை வைத்தேன். அரசிடம் இருந்து எந்த தகவலும் இல்லை. பஞ்சமி நிலம் தொடர்பான புதிய சட்டத்தை, அரசு அறிமுகம் செய்ய வேண்டும்.
அமைச்சர் துரைமுருகன்: ஆங்கிலேயர் ஆட்சியில், 1795ம் ஆண்டுக்கு முன்னர் வரை உயர் ஜாதியினர் மட்டுமே, நிலங்களை வாங்கும் உரிமை இருந்தது. அதன்பின், மற்றவர்களும் நிலம் வாங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
அப்போது, பட்டியல் ஜாதியினர் நிலம் வாங்குவதற்கு உயர் ஜாதியினர் எதிர்த்த காரணத்தால், பஞ்சமி நிலம் என்ற முறை, மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது. எனவே, மத்திய அரசு, இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க முடியும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.