திருச்சி மாநகராட்சியுடன் இணைய மறுக்கும் ஊராட்சிகள்: அரசு அதிகாரிகள் அதிர்ச்சி
திருச்சி மாநகராட்சியுடன் இணைய மறுக்கும் ஊராட்சிகள்: அரசு அதிகாரிகள் அதிர்ச்சி
ADDED : ஜன 14, 2025 04:40 AM

திருச்சி: திருச்சி மாநகராட்சியுடன் இணைய மறுத்து கிராம மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருவதால், அரசு உத்தரவை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கலாமா, என அரசுத்துறை அதிகாரிகள் திணறுகின்றனர்.
திருச்சி மாநகராட்சியில் தற்போது, 65 வார்டுகள் உள்ளன. அதை, நுாறு வார்டுகளாக உயர்த்த திட்டமிட்டு, திருச்சி மாநகரை ஒட்டியுள்ள கிராம பஞ்., பகுதிகளை, மாநகராட்சியுடன் இணைக்க திட்டமிடப்பட்டு, கடந்த சில வாரங்களுக்கு முன், 21 கிராம பஞ்.,சில் உள்ள கிராமங்களை, திருச்சி மாநகராட்சியுடன் இணைத்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
இது, கிராம மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தங்களை கேட்காமல், பஞ்., தலைவர்களின் ஒப்புதலை மட்டும் வைத்துக் கொண்டு, எப்படி தங்கள் பகுதியை மாநகராட்சியோடு இணைக்கலாம் என்று அதிர்ச்சி அடைந்தனர்.
மாநகராட்சியோடு இணைவதால், 100 நாள் வேலை வாய்ப்பு, தொகுப்பு வீடுகள் கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது, வரிகள் உயரும் என்பதால், இதற்கு இணைக்கப்பட்ட கிராம பஞ்.,களில் உள்ள கிராம மக்கள் கடந்த, ஒரு மாதமாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
குமாரவயலுார், அதவத்துார், அல்லித்துறை, சோமரம்பேட்டை, குண்டூர், நெருஞ்சலக்குடி, வாளாடி, தாளக்குடி, கீழக்குறிச்சி உள்பட, அனைத்து இணைக்கப்பட்ட கிராம பஞ்.,களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
அரசு தரப்பில், இணைப்புக்கு ஆட்சேபம் இருந்தால் தெரிவிக்கலாம் என்று கூறி, 6 மாதம் அவகாசம் அளித்திருந்தாலும், அரசாணை வெளியிடப்பட்டு விட்டதால், இணைப்பு உறுதியாகும் என்று கிராம மக்கள் நினைத்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேருவோ, கிராம மக்களின் ஒப்புதல் இல்லாமல், இணைப்பு நடக்காது என்று கூறுகிறார்.
அரசாணை வந்து விட்டதால், இதை மக்கள் நம்ப தயாரில்லை. இது ஒருபுறம் இருக்க, அரசாணை வெளியிடப்பட்டு விட்டதால், கிராம பஞ்.,களை, மாநகராட்சியுடன் இணைக்கும் பணிகளை துவக்கலாமா, வேண்டாமா என்று, மாநகராட்சி, வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் குழப்பமடைந்துள்ளனர்.
இதற்கு, தமிழக அரசு தெளிவான அறிவிப்பு வெளியிட வேண்டும் என்ற கிராம மக்களும், அரசுத்துறை அதிகாரிகளும் எதிர்பார்க்கின்றனர்.