ஜி.எஸ்.டி., செலுத்தாத ஊராட்சிகள்: தனி அலுவலர்கள் தவியாய் தவிப்பு
ஜி.எஸ்.டி., செலுத்தாத ஊராட்சிகள்: தனி அலுவலர்கள் தவியாய் தவிப்பு
ADDED : ஜன 20, 2025 05:34 AM

பல்லடம்: தமிழகத்தில், புதிதாக உருவாக்கப்பட்ட ஒன்பது மற்றும் சென்னை மாவட்டம் தவிர்த்து, மீதமுள்ள, 28 மாவட்டங்களில் உள்ள ஊராட்சி தலைவர்களின் பதவிக்காலம், ஜனவரி 5ம் தேதியுடன் நிறைவடைந்தது.
தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, ஊராட்சிகள் நிர்வகிக்கப்படுகின்றன. ஊராட்சிகளில் மேற்கொள்ளப்படும் ஒப்பந்த பணிகள், செலவினங்கள் உள்ளிட்ட அனைத்து செலவு கணக்குகளுக்கும் ஜி.எஸ்.டி., தாக்கல் செய்யப்பட வேண்டும். இதற்காக, பிடித்தம் செய்யப்படும் தொகையில் இருந்து, ஜி.எஸ்.டி., செலுத்த வேண்டியது ஊராட்சிகளின் கடமை.
மூன்று ஆண்டுகளாக, பெரும்பாலான ஊராட்சிகளில் பிடித்தம் செய்யப்பட்ட ஜி.எஸ்.டி., தொகை செலுத்தப்படாமல் உள்ளது. ஊராட்சி தலைவர்கள் உட்பட செயலர்களும், ஜி.எஸ்.டி., செலுத்தப்படுவதை உறுதி செய்யாமல் விட்டதால், பல லட்சம் ரூபாய் ஜி.எஸ்.டி., தொகை பாக்கி உள்ளது.
குடிநீர் வரி, மின் கட்டணம் என, பல்வேறு தொகைகள் ஊராட்சிகளில் கிடப்பில் வைக்கப்பட்டுள்ள நிலையில், நிலுவையில் உள்ள தொகைகளை செலுத்துவதா அல்லது மக்களுக்கான பணிகளை மேற்கொள்வதா என தெரியாமல், தனி அலுவலர்கள் தவிக்கின்றனர்.
ஊராட்சி தலைவர்களின் பதவிக்காலம் தற்காலிகமானது. இதுபற்றி நன்றாக தெரிந்தும், ஊராட்சி செயலர்கள் மற்றும் ஆடிட்டிங் அலுவலர்கள், ஜி.எஸ்.டி., நிலுவை பற்றி தெரியப்படுத்தி, அறிவுறுத்தாதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஏராளமான ஊராட்சிகளிலும், ஜி.எஸ்.டி., தொகை நிலுவையில் இருக்க வாய்ப்புள்ளதால், நேர்மையான அதிகாரிகளை கொண்ட சிறப்பு குழு அமைத்து, ஆய்வு மேற்கொண்டு, ஜி.எஸ்.டி., தொகை வசூலிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான், மக்களுக்கான பணிகள் தொய்வின்றி நடக்கும்.