ADDED : மே 22, 2025 04:01 AM
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே, ஊராட்சி தலைவர் மற்றும் துணை தலைவரின் 'செக்' பவரை பறித்து கலெக்டர் பிரசாந்த் உத்தரவிட்டார்.
உளுந்துார்பேட்டை தாலுகா திருநாவலுார் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டு பாண்டூர் ஊராட்சி உள்ளது. இந்த
ஊராட்சியின் தலைவராக சித்ராவும், துணைத் தலைவராக கிருஷ்ணவேணி உள்ளனர்.
இருவரும் ஊராட்சி நிர்வாக கணக்கு வழக்குகளை முறையாக பராமரிக்கவில்லை. மேலும், கிராம கூட்டங்களை முறையாக நடத்துவதில்லை என்பன உள்ளிட்ட பல்வேறு புகார்களை பொதுமக்கள் தொடர்ந்து முன் வைத்து வந்தனர்.
இதுகுறித்து கலெக்டர் அலுவலக அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், குற்றச்சாட்டுகள் உண்மை என தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து கலெக்டர் பிரசாந்த் இருவரின் செக் பவரை பறித்து, ஊராட்சிக்கு தேவையான அடிப்படை வசதிகளை பி.டி.ஓ., அதிகாரிகள் மேற்கொள்ள உத்தரவிட்டார்.