துரியோதனன் கூட்டத்தில் பன்னீர் அ.ம.மு.க., தினகரன் ஆவேசம்
துரியோதனன் கூட்டத்தில் பன்னீர் அ.ம.மு.க., தினகரன் ஆவேசம்
ADDED : பிப் 22, 2026 02:20 AM

தஞ்சாவூர்: அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன், கும்பகோணத்தில் நேற்று அளித்த பேட்டி:
ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை பரதனாக நடித்துவிட்டு, அவர் மறைவுக்கு பின், தன்னை முதல்வராக்கிய கட்சிக்கும், ஆட்சிக்கும் எதிராக செயல்பட்டவர் பன்னீர்செல்வம். அ.தி.மு.க., அரசை கவிழ்க்க, தி.மு.க., கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக ஓட்டளித்தவர்.
தனக்கு பதவி வேண்டும் என்பதற்காக, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வளர்த்த இயக்கத்துக்கே துரோகம் செய்ய துணிந்துவிட்டார். தன்னை தர்மராக நினைத்து, 1.0 என தர்மயுத்தம் நடத்தினார்.
'இதை குருமூர்த்தி சொன்னதால் தான் செய்தேன்' என்றார். பின், தர்மயுத்தம் 2.0-வை முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் சொன்னதால் துவங்கியதாக கூறினார். தற்போது 3.0-வை துவங்கி இருக்கிறார். இதற்கு யாரை அடையாளம் காட்டப் போகிறாரோ.
தர்மயுத்தத்தை தர்மர் தான் நடத்த வேண்டும்; அதர்மவாதி நடத்தக் கூடாது. தி.மு.க., என்னும் துரியோதனன் கூட்டத்தில் பன்னீர்செல்வம் சேர்ந்திருக்கிறார். போக போகத்தான் எப்படிப்பட்ட கூட்டம் என்பது பன்னீருக்கு தெரிய வரும்.
அமைச்சர் நேரு செய்த ஊழலில், தி.மு.க.,வின் முதல் குடும்பத்துக்கும் தொடர்பு இருப்பதால், அவரை காப்பாற்ற முயல்கின்றனர்.
இவ்வாறு தினகரன் கூறினார்.

