ADDED : ஜன 08, 2024 07:05 AM

என். மல்லிகை மன்னன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
'பொதுச் செயலர் பதவியிலிருந்து இ.பி.எஸ்., தானாகவே விலகும் வரை, என் தர்மயுத்தம் தொடரும்' என்று, சபதம் செய்திருக்கிறார் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம். இ.பி.எஸ்., முறைப்படி பொதுக்குழுவைக் கூட்டித் தான், அ.தி.மு.க.,வின் பொதுச் செயலர் ஆனாரே தவிர, தனக்கு தானே பொதுச்செயலர் என்று பட்டம் சூட்டிக் கொள்ளவில்லை.
அவர் பொதுச் செயலர் ஆனதை, தேர்தல் கமிஷனும் அங்கீகரித்து, தேர்தலில் போட்டியிட இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்திக் கொள்ளவும், பழனிசாமிக்கு அனுமதியும் அளித்துள்ளது. அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் பெரும்பாலானோர், இன்றும் இ.பி.எஸ்.,சை தான் ஆதரிக்கின்றனர்.
அ.தி.மு.க., தொண்டர்களில் பெரும்பான்மையோர், அவர் பக்கம் இருக்கின்றனர். அ.ம.மு.க., கட்சியை துவக்கிய தினகரன் பக்கம், எந்த எம்.எல்.ஏ.,வும் செல்லவில்லையே... மேலும், தொண்டர்கள் ஆதரவும், எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவும் இல்லாமல் தானே தினகரனும், பன்னீர்செல்வமும் இருக்கின்றனர்.
இந்த லட்சணத்தில், துணை முதல்வர் பதவி என்ற, 'டம்மி பதவி' தனக்கு வலுக்கட்டாயமாக வழங்கப்பட்டதாக, பன்னீர்செல்வம் இப்போது கதை விடுகிறார். ஜெயலலிதா உயிருடன் இருந்த வரை, அமைச்சர்கள் டம்மியாக, ஜீரோக்களாகத் தானே நடத்தப்பட்டனர்?
பன்னீர்செல்வம் எத்தனை தர்மயுத்தம் நடத்தினாலும், பழனிசாமி பொதுச்செயலர் பதவியை ராஜினாமா செய்யமாட்டார். மக்கள் செல்வாக்கை இழந்துவிட்ட பன்னீர்செல்வம், எவ்வளவு தான் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும், மீண்டும் அ.தி.மு.க.,வில் பழைய செல்வாக்கை அடைய முடியாது.
தர்ம யுத்தம் நடத்துவதற்கு பதிலாக, தி.மு.க.,வில் ஐக்கியமாகி, கருணாநிதியின் புகழ் பாடினால், எம்.எல்.ஏ., பதவியாவது பன்னீர்செல்வத்திற்கு கிடைக்கும்.