ADDED : மார் 06, 2024 06:15 AM

சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் விடுவிக்கப்பட்ட உத்தரவை, தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கின் விசாரணையை, வரும் 25க்கு, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.
கடந்த 2001 - 06ல், அ.தி.மு.க., ஆட்சியின் போது, வருவாய் துறை அமைச்சராக பன்னீர்செல்வம் பதவி வகித்தார். வருமானத்துக்கு அதிகமாக, 1.77 கோடி ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் குவித்ததாக, பன்னீர்செல்வத்துக்கு எதிராக, 2006ல் தி.மு.க., ஆட்சியின் போது, லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது. அவரது மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு எதிராகவும் வழக்குப் பதிவு செய்தது.
ஆட்சி மாறியதும், வழக்கை திரும்ப பெற அனுமதி கோரி, சிவகங்கை நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அறிக்கை தாக்கல் செய்தது. அதை ஏற்று, வழக்கில் இருந்து பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து, சிவகங்கை நீதிமன்றம் 2012ல் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை மறுஆய்வு செய்யும் விதமாக, தாமாக முன்வந்து, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வழக்கை விசாரணைக்கு எடுத்தார். ஏற்கனவே தேதி நிர்ணயிக்கப்பட்டதை அடுத்து, வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் வாதாட உள்ளார் என்றும், இரண்டு நாட்கள் அவரால் ஆஜராக இயலாததால், விசாரணையை வேறு நாட்களுக்கு தள்ளி வைக்கவும் கோரினார்.
அதை ஏற்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், விசாரணையை, வரும் 25, 26ம் தேதிகளுக்கு தள்ளி வைத்தார்.

