ADDED : ஆக 07, 2025 02:04 AM

சென்னை: மாடு மேய்த்து போராட்டம் நடத்திய, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் மகன் ஜெய பிரதீப் பாராட்டு தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
தேனி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில், கால்நடைகளுக்கான மேய்ச்சல் நில உரிமை கோரி, சீமான் நடத்திய போராட்டம் பாராட்டுக்குரியது. கால்நடைகள் உள்ளிட்ட எந்த உயிராயினும், தன் உயிரைப் போல எண்ணுவதே மனிதநேயம்.
மேய்ச்சல் நில உரிமை என்பது நம் வாழ்வியல், உணவியல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு என, அனைத்தையும் இணைக்கும் ஒரு இயற்கை முறை. எனவே, சீமான் போராடுவது நம்பிக்கை அளிக்கிறது.
இயற்கை ஆர்வலன், தேனி மாவட்டத்தை சேர்ந்தவன் என்ற முறையில், அவருக்கு முழு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஜெய பிரதீப்புக்கு நன்றி தெரிவித்துள்ள சீமான், 'ஓட்டுரிமையற்ற ஆடு, மாடுகள், மரங்களுக்கான அரசியலை, நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கிறது. இது புதிய அரசியல் புரட்சி. இந்த உயிர்மநேய அரசியலை வரவேற்று, பாராட்டியுள்ள தேனி மண்ணின் மகன் ஜெய பிரதீப்புக்கு நன்றி' என தெரிவித்துள்ளார்.