காவல் துறைக்கு சுதந்திரம் பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
காவல் துறைக்கு சுதந்திரம் பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
ADDED : ஜன 31, 2025 08:10 PM
சென்னை:'தமிழகத்தில் சட்ட விரோத செயல்கள் அதிகரிப்பதற்கு, காவல் துறை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்காததுதான் காரணம்' என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:தி.மு.க., அரசின், 45 மாத ஆட்சியில், தமிழகத்தில் கொலை, கற்பழிப்பு, போதைப் பொருள் புழக்கம் என, சட்ட விரோத செயல்கள் அதிகரித்து வருகின்றன. காவல் துறையினர் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்காததுதான், இதற்கு காரணம். இந்நிலையில், மாநில சைபர் கிரைம் டி.எஸ்.பி.,யாக பணியாற்றிய ராகவேந்திரா ரவி, தன் பதவியை ராஜினாமா செய்திருப்பது, இதை உறுதிப்படுத்தி உள்ளது.
அண்ணா பல்கலை மாணவி வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம், மூன்று காவல் துறை உயர் அதிகாரிகள் அடங்கிய, சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து, விசாரணை செய்ய உத்தரவிட்டது. இக்குழுவிற்கு உதவியாக சைபர் க்ரைம் டி.எஸ்.பி., ராகவேந்திரா ரவி செயல்பட்டு வந்தார். அவர் சிறப்பு புலனாய்வுக் குழுவினர், தன்னைச் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கவில்லை எனக் கூறி, விசாரணையில் இருந்து விலகிக் கொள்வதாகவும், தனிப்பட்ட காரணங்களுக்காக, தனது டி.எஸ்.பி., பதவியை ராஜினாமா செய்வதாகவும், டி.ஜி.பி.,க்கு கடிதம் எழுதியுள்ளார். இதன் வாயிலாக, தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடக்கவில்லை என்பது உறுதியாகி விட்டது.
உயர் அதிகாரிகள் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கவில்லை எனக் கூறப்பட்டாலும், அந்த அதிகாரிகளுக்கு அரசியல் ரீதியாக ஏதாவது அழுத்தம் தரப்பட்டிருக்குமோ என்ற, சந்தேகம் எழுகிறது. இவ்வழக்கில், உண்மைக் குற்றவாளி கண்டுபிடிக்கப்பட்டு, உரிய தண்டனை கிடைக்கும் வரை, சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணையை, உயர் நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான், விசாரணை சுதந்திரமாக நடைபெற்று, நீதி நிலைநாட்டப்படும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.