ADDED : டிச 14, 2024 09:52 PM
சென்னை:'வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, தலா 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்' என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
அவரது அறிக்கை:
இலங்கை கடற்பகுதியில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக, திருவெல்வேலி, தென்காசி, துாத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலைக்கு கால்வாய்களை துார்வாராததும், ஆக்கிரமிப்புகளும்தான் காரணம் என்று, அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். திருச்சுழி, காளையார்குளம் கண்மாயில் உடைப்பு ஏற்பட்டதன் காரணமாக, நெற்பயிர் மற்றும் இதர பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன.
திருச்சி, திருப்பூர், ராமநாதபுரம், பொள்ளாச்சி போன்ற பகுதிகளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால், மீட்பு பணி மற்றும் நிவாரணப் பணிகள் மந்த கதியில் நடக்கின்றன. குடிசைகள், வீடுகள், உடமைகள், வாகனங்கள் உள்ளிட்டவைக்கு, சேதத்திற்கு ஏற்ப நிவாரணத் தொகை மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 25 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.