எனக்கு வழிவிட்டு பன்னீர்செல்வம் ராமநாதபுரத்தில் போட்டியிடுகிறார்: தினகரன்
எனக்கு வழிவிட்டு பன்னீர்செல்வம் ராமநாதபுரத்தில் போட்டியிடுகிறார்: தினகரன்
ADDED : மார் 25, 2024 03:35 AM

தேனி : ''தேனியில் எனக்கு வழிவிட்டு பன்னீர்செல்வம் ராமநாதபுரத்தில் போட்டியிடுகிறார் '' என பெரியகுளம் அருகே ஜி.கல்லுப்பட்டியில் அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் தெரிவித்தார்.
தேனி மாவட்டம் பெரியகுளம் ஜி.கல்லுப்பட்டி பட்டாளம்மன் கோயிலில் தரிசனம் செய்து தேனியில் தினகரன், திருச்சி தொகுதியில் செந்தில் நாதன் என அ.ம.மு.க.,வேட்பாளர்கள் பெயர்களை தினகரன் அறிவித்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ள மோடிக்கு ஆதரவளிக்கும் வகையில் மக்கள் ஓட்டளிப்பர். தேனி தொகுதியில் ஏற்கனேவே பணியாற்றி உள்ளேன். எப்படி பணி செய்தேன் என்பதை நினைவுகூறும் மக்களுக்கு தெரியும். ஜெயலலிதாவிடம் கோரிக்கை வைத்து பல திட்டங்களை நிறைவேற்றினேன். தற்போது அவர் இல்லை.
கூட்டணி கட்சி என்ற முறையில் பிரதமர் மோடியிடம் பேசி நான் தமிழகத்திற்கு தேவையானவற்றை பெற்றுத்தருவேன்.
தி.மு.க., வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் எனது முன்னாள் நண்பர். யாருக்கு ஓட்டளிக்க வேண்டும் என மக்கள் முடிவு செய்வார்கள். நான் பிறந்தது தஞ்சை. நான் அரசியலில் பிறந்த இடம் தேனி. தொகுதி வளர்ச்சிக்காக ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு செயல்படுவேன். அரசியலில் நான் யாருக்கும் குரு கிடையாது.
ஜெயலலிதாவிற்கு நான் சிஷ்யன். தொகுதிக்கு தவறாமல் வருபவர் என்பதால் மக்கள்செல்வன் என்ற பெயர் இங்குள்ள மக்கள் வழங்கியது. நான் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இன்றி இருந்தேன். பிறர் கூறிய போதும் பிரசாரம் செய்யும் எண்ணத்தில் இருந்தேன். நண்பர் பன்னீர்செல்வம், அவரது மகன் ரவீந்திரநாத் இருவரும் நான் தேர்தலில் போட்டியிட கூறினர்.
இது குறித்து பன்னீர்செல்வத்துடன் பேசுகையில் அவர் 'எந்த தொகுதியில் போட்டியிட உள்ளீர்கள்' என கேட்டார். நான் 'போட்டியிட்டால் தேனியில் போட்டியிடுவேன்' என்றேன். அதன்படி அவர் எனக்கு வழிவிட்டு ராமநாதபுரத்தில் போட்டியிடுகிறார். இருவரும் வெற்றி பெறுவோம். நான் தேர்தலில் போட்டியிடுவதை மக்கள் விரும்புகின்றனர். மற்ற கட்சிகளை போட்டியாக கருதவில்லை.
தி.மு.க.வினர் எப்போதும் போல் ஏமாற்று வேலை தான் செய்வார்கள். தற்போது இந்தியாவின் பாதுகாப்பையும், வளர்ச்சியையும் பிரதமர் மோடி உயர்த்தி வருகிறார். மற்ற நாடுகள் நிதி நெருக்கடியில் சிக்கிய போதும், இந்தியாவில் எந்த பாதிப்பும் இல்லை. சட்டசபை தேர்தலிலும் இதே கூட்டணி தொடரும் என்றார்.

