பரந்துார் ஏர்போர்ட் திட்டத்தில் இரு அணுகு சாலைகள்; 13 கிராமங்களில் 210 ஏக்கர் நிலம் கையகப்படுத்த முடிவு
பரந்துார் ஏர்போர்ட் திட்டத்தில் இரு அணுகு சாலைகள்; 13 கிராமங்களில் 210 ஏக்கர் நிலம் கையகப்படுத்த முடிவு
UPDATED : டிச 17, 2024 06:47 AM
ADDED : டிச 17, 2024 12:51 AM

காஞ்சிபுரம்: பரந்துார் பசுமைவெளி விமான நிலையத்திற்கு, கிழக்கு, மேற்கு புற அணுகு சாலை அமைக்க, 13 கிராமங்களில், 210 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இந்த புதிய சாலையில், கனரக வாகனங்கள் மற்றும் இலகுரக வாகனங்கள் நெரிசலின்றி செல்ல வழி கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையின் இரண்டாவது விமான நிலையம், காஞ்சிபுரம் மாவட்டம் பரந்துார் சுற்றுவட்டார பகுதியில் உள்ள, 20 கிராமங்களில், 5,746 ஏக்கரில் அமையவுள்ளது.
இதில், 3,774 ஏக்கர் பட்டா நிலம், 1,972 ஏக்கர் அரசு நிலம் என, இரு வகை நிலங்களாக உள்ளன. தனியார் பட்டா நிலங்களை கையகப்படுத்தும் பணிகளில், வருவாய் துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
![]() |
கிராமவாசிகளின் எதிர்ப்புகள் தொடரும் நிலையில், நிலம் கையகப்படுத்தும் பணிகளை, மாவட்ட நிர்வாகம் மற்றும் வருவாய் துறையினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
விமான நிலைய திட்டத்தால் பாதிக்கப்படும் கிராமவாசிகளை. மறு குடியமர்வு செய்வதற்கு தேவையான கணக்கெடுப்பு பணிகளை வருவாய் துறையினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
நாகப்பட்டு, நெல்வாய், தண்டலம், ஏகனாபுரம், மகாதேவிமங்கலம் ஆகிய ஐந்து கிராமங்களில் இருக்கும், 1,005 வீடுகள் கையகப்படுத்தப்பட உள்ளன.
இதன் காரணமாக, இங்குள்ள குடும்பங்களை சிறுவள்ளூர், மடப்புரம், மதுரமங்கலம், மகாதேவிமங்கலம் ஆகிய நான்கு கிராமங்களில், 238 ஏக்கர் நிலத்தில், அனைத்து வசதிகளுடன் மறுகுடியமர்வு செய்ய, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
பரந்துார் விமான நிலையத்திற்கு, கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் செல்வதற்கு ஏற்ப, இரு விதமான சாலைகள் அமைக்கப்பட உள்ளன. கிழக்கு மற்றும் மேற்கு அணுகு சாலை என, இருவித அணுகு சாலைகள் அமைய உள்ளன.
காஞ்சிபுரம் மாவட்டம், கோவிந்தவாடி, பள்ளம்பாக்கம், கொட்டவாக்கம், மூலப்பட்டு, புள்ளலுார், போந்தவாக்கம், பரந்துார்-, படுநெல்லி, கண்ணன்தாங்கல், மகாதேவிமங்கலம் ஆகிய 10 கிராமங்கள் மேற்கு புற சாலையில் அமைகின்றன.
திருவள்ளூர் மாவட்டம் கோட்டையூர், கண்ணுார், புதுப்பட்டு ஆகிய மூன்று கிராமங்கள் என, கிழக்கு புற சாலையில் அமைகின்றன. கிழக்கு, மேற்கு என, இரு அணுகு சாலைகளிலும், 13 கிராமங்கள் உள்ளன. இந்த 13 கிராமங்களில், 210.37 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.
இந்த புதிய அணுகு சாலைகள், விமான நிலையத்திற்கு தேவையான சரக்குகளை கையாள்வதற்கும், வாகனங்கள் மற்றமாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு செல்ல எளிதாக இருக்கும்.
நிலம் கையகப்படுத்தும் பணிகளை, நிலஎடுப்பு திட்ட வருவாய் துறையினர் துவக்க உள்ளனர் என, வருவாய் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து வருவாய் துறை அதிகாரிகள் கூறியதாவது:
சென்னை - திருவள்ளூர் மார்க்கமாக செல்லும் வாகனங்கள், பரந்துார் பசுமைவெளி விமான நிலையத்திற்கு செல்வதற்கு, கிழக்கு அணுகு சாலை வழியாகவும் காஞ்சிபுரம் - அரக்கோணம் வழியாக செல்லும் வாகனங்கள், பரந்துார் விமான நிலையத்திற்கு, மேற்கு புற அணுகு சாலை வழியாகவும் செல்ல அனுமதிக்கப்பட உள்ளன.
இந்த இரு அணுகு சாலைகளுக்கும் தேவையான நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. விரைவில் பணிகள் துவக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.