ADDED : ஜன 16, 2024 06:49 AM
புதுக்கோட்டை : அரிமளம் அருகே பிறந்து ஒரு மாதமான குழந்தையை கொலை செய்து நாடகமாடிய பெற்றோரை போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே கரையப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மோகன்ராம் 35. இவருக்கும் புதுக்கோட்டை மாவட்டம் நம்பூரணிப்பட்டியை சேர்ந்த நிவேதா என்பவருக்கும் கடந்த 2021ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இருவரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் நிவேதா திருமணமான 8 மாதத்தில் மோகன்ராஜை பிரிந்து சென்றார். அவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
சென்னை மணலியில் பெற்றோருடன் வசித்து வரும் நிவேதா விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனிடையே அறந்தாங்கி அருகே வைரிவயல் கிராமத்தை சேர்ந்த கிருத்திகா 26 என்பவருடன் திருமணம் செய்யாமல் மோகன்ராஜ் வாழ்ந்தார். அவர்களுக்கு ஒரு மாதத்திற்கு முன் ஆண் குழந்தை பிறந்தது.
கடந்த 11ம் தேதி தொட்டிலில் துாங்கிக் கொண்டிருந்த குழந்தை வீட்டு மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியில் இறந்து கிடந்தது.
இதுகுறித்து கே.புதுப்பட்டி போலீசார் வழக்குப் பதிந்து மோகன்ராஜ் கிருத்திகா ஆகியோரிடம் தனித்தனியே விசாரணை நடத்தினர்.
முதல் மனைவியிடம் விவாகரத்து பெறாமல் கிருத்திகாவுடன் சேர்ந்து வாழ்ந்த மோகன்ராஜ் தற்போது கிருத்திகாவுக்கும் குழந்தை பிறந்ததால் நான் சிறைக்கு செல்ல நேரிடும் என்று கூறியுள்ளார்.
அதனால் குழந்தையை கொன்று விட முடிவு செய்து மோகன்ராஜ் குழந்தையின் கழுத்தை துண்டால் நெரித்து கொன்றுள்ளார். கிருத்திகா தண்ணீர் தொட்டிக்குள் குழந்தையை போட்டு விட்டு நாடகமாடியது தெரிய வந்தது.
குழந்தையை கொன்றதாக கிருத்திகா கொடுத்த வாக்குமூலத்தின்படி நேற்று முன்தினம் இரவு போலீசார் இருவரையும் கைது செய்தனர். பொன்னமராவதியில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவர்களை சிறையில் அடைத்தனர்.