ஏதாவது ஒரு பாடத்திட்டத்தை கொடுங்கள் : பெற்றோர் வலியுறுத்தல்
ஏதாவது ஒரு பாடத்திட்டத்தை கொடுங்கள் : பெற்றோர் வலியுறுத்தல்
UPDATED : ஜூலை 28, 2011 12:51 AM
ADDED : ஜூலை 27, 2011 11:28 PM

சென்னை: 'சமச்சீர் கல்வி விவகாரத்தில், தமிழக அரசு கவுரவம் பார்க்கக் கூடாது. மாணவர்கள் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு, உடனே ஒரு முடிவை எடுக்க வேண்டும்' என, பெற்றோர் கருத்து தெரிவித்துள்ளனர். இடியாப்ப சிக்கலாக மாறியுள்ள சமச்சீர் கல்வி விவகாரம் குறித்து, சென்னை எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவியின் தகப்பனார் ஆறுமுகம் கூறியதாவது: என் மகள், 10ம் வகுப்பு படிக்கிறாள். இதுவரை பாடப் புத்தகங்கள் வழங்கவில்லை. சமச்சீர் கல்வி பிரச்னை எப்போது முடியும், எப்போது புத்தகங்கள் கிடைக்கும் என்று தெரியவில்லை. இதனால், மாணவர்களுக்குத் தான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு ஆறுமுகம் கூறினார்.
அதே பள்ளியில் படிக்கும் மற்றொரு மாணவியின் தகப்பனார் கோபிநாத் கூறியதாவது: சமச்சீர் கல்வி பிரச்னைக்கு, கருணாநிதியும், ஜெயலலிதாவும் தான் காரணம். அடுத்த முறை ஆட்சிக்கு வருவோமா; மாட்டோமா என்பது தெரியாமல், கருணாநிதி சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்களை உருவாக்கினார். அது தான், பிரச்னைக்கு முதல் காரணம். ஆட்சி மாறி, ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். இவராவது கவுரவம் பார்க்காமல், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்தியிருக்க வேண்டும். தேவையில்லாத பகுதிகளை நீக்கிவிட்டு, மாணவர்களுக்கு பாடப் புத்தகங்களை வழங்கியிருக்கலாம். அப்படி செய்யவில்லை. இவ்வாறு கோபிநாத் கூறினார்.
இந்த பள்ளி மாணவியர் கூறும்போது, 'பாடப் புத்தகங்கள் வரும்... வரும் என்று ஆசிரியர்கள் கூறிக்கொண்டே இருக்கின்றனர். எப்போது வரும் என்று தான் தெரியவில்லை. பாடப் புத்தகங்களை உடனடியாக வழங்கினால் நன்றாக இருக்கும். பாடப் புத்தகங்கள் இல்லாமல், பல்வேறு பயிற்சிகளை அளிக்கின்றனர். எந்த பாடத்திட்டமாக இருந்தாலும், ஏதாவது ஒரு பாடத்திட்டத்தை அரசு அமல்படுத்த வேண்டும்' என்றனர்.
எழும்பூர் டான்போஸ்கோ மெட்ரிகுலேஷன் பள்ளியைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவர்கள் லியாண்டர், கிறிஸ்டோ, தாரிக் ஆகியோர் கூறியதாவது: ஏதாவது ஒரு பாடத்திட்டத்தை காலம் தாழ்த்தாமல் உடனடியாக அமல்படுத்த வேண்டும். பத்தாம் வகுப்பு மிகவும் முக்கியமானது. பாடப் புத்தகங்கள் இருந்திருந்தால், இந்நேரம் பல பாடங்களை நடத்தி முடித்திருப்பர். வாரந்தோறும் மாதிரித் தேர்வுகள் நடக்கும். பாடத் திட்டங்கள் இல்லாததால் இப்போது எதுவுமே இல்லை. பொதுவான விஷயங்களைத் தான் வகுப்புகளில் ஆசிரியர்கள் கற்றுக் கொடுக்கின்றனர். சமச்சீர் கல்வி வழக்கில் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. இது எப்போது முடியும்; எப்போது தீர்ப்பு வரும் என்று தெரியவில்லை. தமிழக அரசு ஏதாவது ஒரு முடிவை எடுத்து அமல்படுத்தினால், நாங்கள் கடைசி நேரத்தில் பாடங்களை படிக்க சிரமப்பட மாட்டோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
பரங்கிமலை, பட் ரோடு பகுதியைச் சேர்ந்த பெற்றோர் சுதா, ஷர்மிளா ஆகியோர் கூறியதாவது: சமச்சீர் கல்வித் திட்டமோ; அது பழைய பாடத்திட்டமோ, ஏதாவது ஒரு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஏற்கனவே இரண்டு மாதம் கோடை விடுமுறை. பள்ளி திறந்ததற்குப் பின், இரண்டு மாதம் பாடப் புத்தகங்கள் இல்லை. நான்கு மாதங்களாக மாணவர்கள் படிக்காமல் உள்ளனர். பாடப் புத்தகங்கள் இல்லாததால், மாணவ, மாணவியர் வீடுகளுக்குத் திரும்பியதும், 'டிவி' பார்க்கின்றனர்; இல்லையென்றால், விளையாட ஆரம்பித்து விடுகின்றனர்.
தொடர்ச்சியாக பல மாதங்கள் பாடப் புத்தகங்கள் இல்லாமல் இருந்தால், மாணவர்களின் கற்றல் திறன் மங்க ஆரம்பித்துவிடும். மாணவர்களுக்கும், கற்றலில் ஆர்வம் குறைந்துவிடும். எனவே, சமச்சீர் கல்வி விவகாரத்தில், தமிழக அரசு உடனடியாக ஒரு முடிவை எடுத்து அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
நங்கநல்லூர் பி.எம்.எஸ்., மெட்ரிகுலேசன் பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவி ஸ்வேதா: ஏப்ரல் மாதத்தில் சமச்சீர் கல்வி பாடம் பள்ளியில் எடுத்தனர். இந்த சமச்சீர் பாடத்திட்டம் வழக்கமாக படிக்கும் பாடத்தைப் போலவே உள்ளது. எந்த வித்தியாசமும் தெரியவில்லை. பள்ளி திறந்து இரண்டு மாதங்கள் ஆகியும், எந்தப் பாடமும் நடத்தவில்லை. முறையாக பாடம் நடத்தியிருந்தால், இந்த சமயம் இரண்டு மாதாந்திர தேர்வை எழுதி முடித்திருப்போம்; அது முடியவில்லை. இதனால், நன்றாகப் படிக்கும் மாணவ, மாணவியருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த ஆண்டு, அரசு பொதுத்தேர்வை சந்திக்க பயமாக இருக்கிறது. எந்த பாடப்பிரிவாக இருந்தாலும் படிக்கத் தயாராக இருக்கிறோம். அதை சீக்கிரமாக அரசு அறிவித்தால் மாணவர்களுக்கு எளிதாக இருக்கும்.
நங்கநல்லூர் தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன் சிவசங்கர்: மெட்ரிகுலேசன் பாடப்பிரிவை விட சமச்சீர் கல்வி எளிமையாக இருப்பதாகக் கூறுகின்றனர். இதுவரை பள்ளியில் எந்தப் பாடமும் நடத்தவில்லை. அடுத்த ஒரு மாதத்தில் காலாண்டுத் தேர்வு வரவுள்ளது. பாடப்புத்தகம் வழங்காததால், மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுகிறது. எனவே, உடனடியாக பாடப்புத்தகங்கள் கொடுக்க, அரசு உத்தரவிட வேண்டும்.
பெற்றோர் சதாசிவம்: சமச்சீர் பாடத்திட்டத்தை அமல்படுத்துவதில் இவ்வளவு காலம் தாழ்த்தக் கூடாது. தி.மு.க., அரசு கொண்டு வந்த திட்டம் என்பதால், புதிய அரசு புறக்கணிப்பதாக மக்களிடம் பரவலாக பேசப்படுகிறது. இதனால், அரசுக்கும் கெட்டபெயர் ஏற்படுகிறது. மேலும், 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பொதுத்தேர்வை எப்படி சந்திப்பர். எனவே, அரசு உடனடியாக முடிவு எடுத்து, சமச்சீர் கல்வி குறித்து தெரிவிக்க வேண்டும்.
கல்வியாளரும், ஓய்வு பெற்ற முதன்மை கல்வி அதிகாரி சுப்பிரமணியன்: பெரும்பாலும் மெட்ரிக் பள்ளிகளில் கூடுதல் சிலபஸ். ஆறாவது முதல் பத்தாவது வரை ஒவ்வொரு பாடத்திற்கும் இரண்டு புத்தகம், சில புத்தகங்கள் நான்கு புத்தகங்களாக உள்ளன. மெட்ரிக் அளவுக்கு சமச்சீர் பாடப்புத்தகம் இல்லை. இப்போது முழுமையாக சொல்லிக் கொடுக்கவும் வாய்ப்பு இல்லை. இதில், ஆங்கில அறிவு வருமா என்ற சந்தேகம் உள்ளது. சமச்சீர் கல்வி கொண்டு வருவது குறித்து, முன்னமே பள்ளிகள் மற்றும் கல்வியாளர்களுக்கு அனுப்பி கருத்துகள் கேட்டிருக்க வேண்டும். ஆனால், இது குறித்து, இன்று வரை பள்ளிகள் மற்றும் கல்வியாளர்களிடம் கேட்கவில்லை. இரண்டு மாதமாகியும் சமச்சீர் கல்வி வேண்டுமா? வேண்டாமா என்பது குறித்து சொல்லத் தெரியவில்லை. இல்லையென்றால் பழைய சிலபசையே தொடரட்டும் என்று சொல்ல வேண்டியது தானே. சமச்சீர் பாடத்திட்டத்தில் உள்ள குறைபாடுகளை நீக்கிவிட்டு, பாடத்தை நடத்த சொல்லலாமே. மாணவர்கள் மற்றும் கல்வி நிலையங்களுடன் அரசு விளையாடக் கூடாது. உடனடியாக முடிவு எடுக்க வேண்டும்.
முருகேசன், ஓய்வு பெற்ற ஆசிரியர், காஞ்சிபுரம்: மாணவர்கள் இடையே ஏற்றத்தாழ்வு இருக்கக் கூடாது என்பதற்காக, சீருடை அமல்படுத்தப்படுகிறது. சமச்சீர் கல்வியின் நோக்கமும், ஏழைக்கு ஒரு கல்வி, பணக்காரனுக்கு ஒரு கல்வி என பாகுபாடு இருக்கக் கூடாது என்பது தான். ஒரே பாடமாக இருந்தால், தனியார் பள்ளிகளின் வருமானம் குறைந்துவிடும் என்பதால், எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். சமச்சீர் கல்வி அவசியம். தேவையற்ற பாடங்கள் இருப்பதாகக் கருதினால், அவற்றை நீக்கிவிட்டு அமல்படுத்தலாம்.
ஜெனாதட்சின், காஞ்சிபுரம்: சமச்சீர் கல்வி தேவை தான். அது தரமானதாக இருக்க வேண்டும். தமிழக முதல்வர் தரமான கல்வியை கொடுக்க விரும்புகிறார். அதற்காக மாற்றங்களைக் கொண்டுவர விரும்புவதில் தவறில்லை.
கிருபாகரன், பழைய இரும்பு வியாபாரி, விப்பேடு: பள்ளிகளில் பாடம் நடத்தப்படாததால் மாணவர்களும், பெற்றோரும் பாதிக்கப்பட்டுள்ளனர். சமச்சீர் பாடத்திட்டத்தின் கீழ் அச்சிடப்பட்ட புத்தகங்கள், தரமில்லாமல் உள்ளதாக அரசு கூறுகிறது. அப்படியெனில், தரமற்ற பாடத்தை நீக்கிவிட்டு, மற்ற பாடங்களை அமல்படுத்த வேண்டும். இனிமேல் புதிதாக புத்தகம் அச்சிட்டு வழங்குவது சாத்தியமில்லை.
பரஞ்ஜோதி, சமூக ஆர்வலர், வல்லம் கிராமம்: சமச்சீர் கல்வி தரமான கல்வியா என்பதை குழுதான் தீர்மானித்தது. தனிநபர் யாரும் முடிவெடுக்கவில்லை. எந்த விஷயமும் சமுதாய பங்கேற்பின்படி தான் நடக்கிறது. குழுவில் பலதரப்பட்டவர்கள் இருந்தனர். அவர்களுக்கு, தரமான கல்வியா? இல்லையா எனத் தெரிந்திருக்கும். இரண்டு மாதங்களாக பள்ளிக் கட்டணம், வேன் கட்டணம், என அனைத்தும் பெற்றோர்களுக்கு சுமை. காலம் தாமதிக்க தாமதிக்க, மாணவர்களுக்குத் தான் பாதிப்பை ஏற்படுத்தும். அரசு உடனடியாக சமச்சீர் கல்வியை கொண்டுவருவது நல்லது.
முனிவேலு, பாத்திரக்கடை, திருக்கழுக்குன்றம்: அனைவருக்கும் பொதுவான பாடத்திட்டம் கொண்ட, சமச்சீர் கல்வி அவசியமானது. தற்போது, மெட்ரிக்குலேசன் கல்வியில், மாணவர்களின் அறிவை வளர்க்கும் விதத்தில் பாடத்திட்டம் உள்ளது. சமச்சீர் கல்வியில் அவ்வாறு இல்லை. இதுபோன்ற குறைபாடு இல்லாதவாறு, சமச்சீர் பாடத்திட்டத்தை மேலும் மேம்படுத்தி, நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்.
மகாலட்சுமி, குடும்பத் தலைவி, மேலப்பட்டு கிராமம்: சமச்சீர் கல்வி பிரச்னையால் படிப்புதான் பாழாகிறது. அனைவருக்கும் பொதுவான பாடத்திட்டத்தை, தரக்குறைவின்றி தயாரித்து, சமச்சீர் கல்வியைக் கொண்டு வர வேண்டும்.