பெற்றோர் தான் பொறுப்பு: போதை பிரச்னைக்கு தீர்வு சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
பெற்றோர் தான் பொறுப்பு: போதை பிரச்னைக்கு தீர்வு சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
UPDATED : ஜன 03, 2026 12:25 AM
ADDED : ஜன 03, 2026 12:05 AM

திருச்சி :தமிழகத்தில் போதை கலாசாரம் அதிகரித்துள்ளது. போதையில் சிறுவர்கள் வன்முறையில் ஈடுபடுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு தீர்வாக, ''பெற்றெடுத்த பிள்ளைகள் போதையின் பாதையில் செல்லாமல் இருக்க, அவர்களை பெற்றோர் தான் கண்காணிக்க வேண்டும்,'' என தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும், போதை பொருட்கள் கடத்தலை தடுப்பது, மத்திய அரசின் பொறுப்பு என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோவின் சமத்துவ நடைபயணத்தை திருச்சியில் நேற்று கொடியசைத்து துவக்கி வைத்த, தமிழக முதல்வரும், தி.மு.க., தலைவருமான ஸ்டாலின் பேசியதாவது:
போதை பொருள் ஒழிப்பு மற்றும் ஜாதி, மத மோதல் தடுப்பை வலியுறுத்தி வைகோ துவக்கியுள்ள நடைபயணம், மாபெரும் வெற்றி பெற வேண்டும்.
போதை மாத்திரைகள்
இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் போதை பொருட்களை நிச்சயம் ஒழிக்க வேண்டும். அதற்காக, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதற்கு ஓரளவிற்கு பலன் கிடைத்துள்ளது. போதை பழக்கத்துக்கு அடிமையானவர்கள், அதன் பாதிப்புகளை உணர்ந்து, அந்த பழக்கத்தை கைவிட வேண்டும். அவர்களது குடும்பத்தினர், அவர்களை திருத்த வேண்டும்.
போதை பொருட்களின் புழக்கம் என்பது மிகப் பெரிய 'நெட்வொர்க்' ஆக உள்ளது. இந்த நெட்வொர்க்கை அழிக்க, மத்திய - மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும். நாட்டின் எல்லைக்குள் போதை பொருட்கள் வருவதையும், மாநிலம் விட்டு மாநிலம் கடத்தப்படுவதையும், மத்திய அரசு தீவிரமாக கண்காணித்து தடுக்க வேண்டும். அதற்கு, அனைத்து மாநில அரசுகளும் ஒத்துழைக்க வேண்டும்.
கடந்த சில மாதங்களில், திருவள்ளூர், வேலுார், ராணிப்பேட்டை போன்ற மாவட்டங்களில், ஒரு லட்சத்துக்கும் அதிகமான போதை மாத்திரைகள் பிடிபட்டன. இதில் சம்பந்தப்பட்டவர்கள், மஹாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா, ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இன்னும் சில வழக்குகளில், குற்றவாளிகள் நைஜீரியா, செனகல் போன்ற நாடு களைச் சேர்ந்தவர்கள்.
தவறில்லை
இப்படிப்பட்ட 'நெட்வொர்க்கை' ஒழிக்க அனைவரும் கை கோர்க்க வேண்டும். போதை பொருள் புழக்கத்தை முற்றிலும் ஒழிக்க, மத்திய அரசு மற்றும் அண்டை மாநில காவல் துறையினருக்கு, தமிழக அரசு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறது.
போதை ஒழிப்பு என்பது, சமூகத்தின் கூட்டு பொறுப்பாக இருக்க வேண்டும். கலைத் துறையைச் சேர்ந்தவர்கள் பொறுப்புடன் படைப்புகளை உருவாக்க வேண்டும். போதையின் தீமைகளை சொல்வதில் தவறில்லை; அதை நியாயப்படுத்துவது, தலைமுறையையே சீரழித்து விடும்.
பெற்றோர் தங்கள் குழந்தை மேல் பாசம் காட்ட வேண்டும். அதற் காக, அவர்கள் பாதை மாறிப் போகும்போது வேடிக்கை பார்க்கக் கூடாது. 'யு டியூப், இன்ஸ்டா ரீல்ஸ்' வாயிலாக எளிதில் கிடைக்கும் பணம், பிள்ளைகளை தவறான பாதையில் கொண்டு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே, பெற்றோர் குழந்தைகளை பொறுப்புடன் வளர்க்க வேண்டும்.
அம்மா, அக்கா, தங்கை என, வீட்டில் இருக்கும் சொந்தங்கள், நம் வீட்டுப் பிள்ளைகள் வழிதவறி செல்லாமல் இருப்பதை கண்காணிக்க வேண்டும். ஆசிரியர்கள், சமூக வலைதள பிரபலங்கள், போதைக்கு எதிராக விழிப்புணர்வு பிரசாரம் செய்ய வேண்டும்.
போதைக்கு அடுத்து, நாட்டின் முக்கியமான பிரச்னை, ஜாதி மற்றும் மத மோதல்கள் தான். மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பொறுப்பான பதவிகளில் இருப்போர் கூட, இரு பிரிவினருக்கு இடையே, மோதலை துாண்டும் விதமாக வெறுப்பு பேச்சு பேசுகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.

