வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க 'செயலி' தேர்தல் கமிஷன் உருவாக்க கட்சிகள் வலியுறுத்தல்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க 'செயலி' தேர்தல் கமிஷன் உருவாக்க கட்சிகள் வலியுறுத்தல்
ADDED : மார் 25, 2025 04:27 AM

சென்னை: 'தவறுகள் இல்லாத வாக்காளர் பட்டியல் தயாரிக்க வேண்டும்' என, தேர்தல் கமிஷன் நடத்திய கூட்டத்தில் பங்கேற்ற அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.
தேர்தல் நடைமுறையை வலுப்படுத்துவது தொடர்பாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் ஆலோசனை கூட்டம், சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நடந்தது.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமை வகித்தார். கூட்டத்தில், தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ., - காங்., - வி.சி., உள்ளிட்ட 12 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
கூட்டம் முடிந்த பின், அவர்கள் அளித்த பேட்டி:
தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி: தவறு இல்லாத வாக்காளர் பட்டியல் தயாரிக்க, தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். தேர்தலின் போது, கூட்டம் நடத்த, விளம்பரம் செய்ய அனுமதி பெற குழு அமைக்கப்படுகிறது.
அந்த குழுவில் விண்ணப்பித்தால், அனுமதிக்கு ஒரு வாரத்திற்கு மேலாகிறது. அனுமதியை, 24 மணி நேரத்திற்குள் வழங்க வேண்டும்.
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்: அனைத்து தேர்தல்களிலும், ஒருவர் ஒரே இடத்தில் ஓட்டுப்பதிவு செய்வதை உறுதி செய்ய வேண்டும். தற்போது, தொழில்நுட்பம் வளர்ந்து உள்ளது.
இதை பயன்படுத்தி, போலி வாக்காளர்களை கண்டறிந்து நீக்க வேண்டும். தேர்தல் நியாயமாக, சுதந்திரமாக நடக்க வேண்டும். ஆளுங்கட்சி அதிகார துஷ்பிரயோகம் செய்வதை தடுக்க வேண்டும்.
ராதாபுரம் தொகுதியில், ஒரே நபரின் பெயர், வாக்காளர் பட்டியலில் மூன்று இடங்களில் உள்ளது. இப்படி இருந்தால் எப்படி தேர்தல் நேர்மையாக நடக்கும்? தவறு செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக பா.ஜ., துணை தலைவர் கரு.நாகராஜன்: நகர்ப்புறங்களில் ஓட்டு சதவீதம் மிகவும் குறைவாக உள்ளது. தொடர் விடுமுறை நாட்களில், ஓட்டுப்பதிவு வைப்பதை தவிர்க்க வேண்டும். ஒரே ஓட்டுச்சாவடி அனைத்து தேர்தலுக்கும் அவசியம்.
ஒவ்வொரு தேர்தலுக்கும் ஓட்டுச்சாவடி மாறுவது தவிர்க்கப்பட வேண்டும். குடும்ப உறுப்பினர்களுக்கே, வெவ்வேறு ஓட்டுச்சாவடி வருகிறது. இது போன்ற குறைகளை களைய வேண்டும்.
வி.சி., தலைமை நிலைய செயலர் பாலசிங்கம்: வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்யும் போது, அதற்கான காரணத்தை தெரியப்படுத்த வேண்டும். ஒருவருக்கு ஒரு வாக்காளர் அடையாள அட்டை இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
தமிழக காங்., வழக்கறிஞர் சூர்யபிரகாசம்: பொதுமக்களின் ஆதார் எண்ணை, வாக்காளர் பட்டியலுடன் இணைக்க, பிரத்யேக செயலியை தேர்தல் கமிஷன் வடிவமைக்க வேண்டும்.
அந்த செயலி ஒருவருக்கு, 18 வயது பூர்த்தியானால், தானியங்கி முறையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்து கொள்ளும் வகையில் இருக்க வேண்டும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், பிறப்பு, இறப்பு பதிவேட்டின் அடிப்படையில், தானியங்கி முறையில் நடைபெற வேண்டும்.
தேர்தல் காலங்களில், பணம் வினியோகத்தை தடுக்கும் வகையில், சிறப்பு புலனாய்வு குழுவினரை தேர்தல் ஆணையம் நியமிக்க வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநில துணை செயலர் பெரியசாமி: ஓட்டுச்சாவடி முகவர்களும், அலுவலர்களும், தினமும் வாக்காளர் பட்டியலில் செய்யும் திருத்தங்களை, பொதுமக்கள் அறியும் வகையில், உள்ளாட்சி அலுவலகங்களிலும், ஓட்டுச்சாவடி முகப்பிலும், பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும்.
ஆம் ஆத்மி கட்சி மாநில பொதுச்செயலர் ஜோசப் ராஜா: பெருநகரங்களில் பதிவாகும் ஓட்டுகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. தேர்தல் கமிஷன் மூன்று முறைக்கு மேல், ஓட்டு போடாதவர்களை கண்டறிந்து, அவர்களை ஓட்டு போட வைக்க வேண்டும். வார இறுதி நாளில் தேர்தல் இருக்கக் கூடாது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.