ADDED : டிச 11, 2024 05:24 AM

சென்னை : கனிமங்கள் உள்ள நிலங்களுக்கு வரி, கல்வி நிறுவனங்களில் கட்டணம் வசூலித்து நடக்கும் நிகழ்வுகளுக்கு கேளிக்கை வரி விதிப்பது உட்பட, 19 சட்ட மசோதாக்கள் நேற்று சட்டசபையில் நிறைவேற்றப்பட்டன.
கனிம வளங்கள் உள்ள நிலங்களுக்கு, அதிலிருந்து கிடைக்கும் கனிமங்களுக்கு ஏற்ப, வரி விதிக்கும் சட்ட மசோதாவை, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று தாக்கல் செய்தார். இதற்கு அ.தி.மு.க., எம்.எல்.ஏ., அக்ரி கிருஷ்ணமூர்த்தி எதிர்ப்பு தெரிவித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ., நாகை மாலி, 'இந்த சட்டத் திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்' என்றார்.
அதற்கு பதில் அளித்த அமைச்சர் துரைமுருகன், 'இந்த சட்ட திருத்தத்தின்படி, கனிம வளங்கள் உள்ள நிலங்களுக்கு வரி விதிக்கும் போது, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு வரிகள் நிர்ணயிக்கப்படும்' என்றார். அதைத்தொடர்ந்து குரல் ஓட்டெடுப்பு வாயிலாக, சட்ட மசோதா நிறைவேறியது.
கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட நிறுவனங்களில், அனுமதி கட்டணம் வசூலித்து நடத்தப்படும், கலை நிகழ்ச்சிகளுக்கு, உள்ளாட்சி அமைப்புகள், 10 சதவீத கேளிக்கை வரி விதிக்க வகை செய்யும் சட்ட மசோதாவை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, நேற்று முன்தினம் தாக்கல் செய்தார்.
அதன் மீது நேற்று விவாதம் நடந்தது. அப்போது, கல்வி நிறுவனங்களில் நடக்கும் கலை நிகழ்வுகளுக்கு, கேளிக்கை வரி விதித்தால், மாணவர்கள் பாதிக்கப்படுவர் எனக்கூறி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., அக்ரி கிருஷ்ணமூர்த்தி எதிர்ப்பு தெரிவித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ., நாகை மாலி, இந்த சட்டத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் நேரு, 'மாணவர்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகளுக்கு இச்சட்டம் பொருந்தாது' என்றார். அதைத்தொடர்ந்து குரல் ஓட்டெடுப்பு வாயிலாக, அந்த சட்ட மசோதா நிறைவேறியது.
உணவக சிறு குற்றங்களுக்கு சிறை தண்டனை ரத்து, பொது கட்டடங்களுக்கு உரிமம் வழங்கும் சட்டத்தில், தற்போதைய நடைமுறைக்கு ஏற்ப திருத்தம், 1994ம் ஆண்டு தமிழக ஊராட்சிகள் சட்டம், 2017ம் ஆண்டு சரக்கு சேவை வரிகள் சட்டம், சென்னை பல்கலை சட்டம், 2019ம் ஆண்டு தமிழக தனியார் பல்கலைகள் சட்டம் உட்பட, 19 சட்ட மசோதாக்கள் நேற்று நிறைவேற்றப்பட்டன.

