UPDATED : அக் 26, 2024 05:59 AM
ADDED : அக் 26, 2024 05:57 AM

வேலுார்: வேலுார் அருகே, ரயில் இன்ஜினுடன் இருந்த பெட்டிகள் துண்டிக்கப்பட்டு, 100 மீட்டர் ஓடியதால், பயணியர் பீதியடைந்தனர்.
அசாம் மாநிலம் திப்ரூகரிலிருந்து, ரேணிகுண்டா, காட்பாடி வழியாக கன்னியாகுமரி செல்லும், விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த, 22ம் தேதி இரவு, 7:55 மணிக்கு அசாம் மாநிலம் திப்ரூகரிலிருந்து புறப்பட்டு, நேற்று காலை வேலுார் மாவட்டம், திருவலம் அருகே காலை, 8:55 மணிக்கு சென்றது.
பொன்னை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலம் அருகே வந்த போது, இன்ஜினையும், ரயில் பெட்டிகளையும் இணைக்கும், 'கப்ளிங்' திடீரென உடைந்து இன்ஜினுடனான தொடர்பு துண்டித்து, 100 மீட்டர் துாரம் இன்ஜின் மட்டும் தனியாக வேகமாக ஓடியது.
![]() |
இதனால், ரயிலில் இருந்த பயணியர் கூச்சலிட்டனர். இன்ஜின் டிரைவர் ஏதோ விபரீதம் நடந்துள்ளதை உணர்ந்து, பின்னால் வரும் பெட்டிகளை பார்த்தபோது, அவை இன்ஜினிலிருந்து துண்டித்துள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின், ரயில் பெட்டிகள் இன்ஜினுடன் மோதாமல் இருக்க, லாவகமாக இன்ஜினை அரை கி.மீ.,க்கு இயக்கி, பின், பெட்டிகளை நிறுத்த செய்தார்.
பின், இன்ஜினை மட்டும் காட்பாடி ரயில்வே ஸ்டேஷனுக்கு இயக்கி, அங்கிருந்து ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தார்.
இந்த ரயிலின் பின்னால் வந்து கொண்டிருந்த, சென்னை - பெங்களூரு செல்லும் டபுள் டக்கர் எக்ஸ்பிரஸ் ரயில், பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரயில் ஆகியவை நடுவழியில் நிறுத்தப்பட்டன.
பின், 10:40 மணிக்கு கோளாறு சரி செய்யப்பட்டு மீண்டும் ரயில் இயக்கப்பட்டது.
இதனால், 2 மணி நேரம் அவ்வழியாக வந்த இரு ரயில்கள் நிறுத்தப்பட்டன. இதனால் அதிலிருந்த பயணியர் அவதியடைந்தனர்.
வழக்கமாக, 100 கி.மீ முதல், 120 கி.மீ வேகம் வரை செல்லக்கூடிய விவேக் எக்ஸ்பிரஸ் ரயில், பொன்னை ஆற்று மேம்பாலத்தை கடக்கும்போது, 30 முதல், 35 கி.மீ., வரை மெதுவாக இயக்கப்பட்டது.
குறைந்த வேகத்தில் சென்ற போது, பெட்டிகளை இணைக்கும் கப்ளிங் உடைந்ததால், பெரிய அளவில் ஏற்பட இருந்த விபத்து தவிர்க்கப்பட்டது.