சாத்தான் புகுந்து விட்டதாக கருதி பெற்ற குழந்தைகளை தாக்கிய போதகர் கைது
சாத்தான் புகுந்து விட்டதாக கருதி பெற்ற குழந்தைகளை தாக்கிய போதகர் கைது
ADDED : மே 31, 2025 12:22 AM

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே சாத்தான் புகுந்து விட்டதாக கூறி மூன்று குழந்தைகளை கொடூரமாக தாக்கிய தந்தையான கிறிஸ்தவ மத போதகர் கிங்ஸ்லி கில்பர்ட்டை 45, போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே புல்லத்துவிளை குடியிருப்பில் வாடகை வீட்டில் வசிப்பவர் கிங்ஸ்லி கில்பர்ட் 45. மதபோதகர். மனைவி சஜினி.
இவர்களுக்கு 8 மற்றும் 6 வயதில் மகன்கள், 8 மாதத்தில் மகள் உள்ளனர். கிங்ஸ்லி கில்பர்ட் அந்த பகுதியில் உள்ள சபைகளில் போதனைகளை செய்து வந்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு கிங்ஸ்லி கில்பர்ட் வீட்டில் இருந்து குழந்தைகள் அலறும் சத்தம் கேட்டது. நீண்ட நேரம் சத்தம் கேட்டதால் அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் கதவை தட்டினர்.
கதவு திறக்கப்படவில்லை. இதுகுறித்து பொதுமக்கள் கருங்கல் போலீசாரிடம் தெரிவித்தனர்.
போலீசார் சென்று நீண்ட நேரம் நேரம் கழித்து கிங்ஸ்லி கில்பர்ட் கதவை திறந்தார். மூன்று குழந்தைகளையும் கயிற்றால் கட்டி கொடூரமாக அவர் தாக்கியது தெரியவந்தது.
ஒரு குழந்தைக்கு உடல் முழுவதும் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது போலீஸ் விசாரணையில் தெரிந்தது. இதையடுத்து கிங்ஸ்லி கில்பர்டை போலீசார் கைது செய்தனர்.
போலீசார் கூறியதாவது: கிங்ஸ்லி கில்பர்ட் தினமும் போதகம் செய்ய செல்லும்போது குழந்தைகளை வீட்டில் வைத்து பூட்டி விடுவது வழக்கம். நேற்று கிங்ஸ்லி கில்பர்ட் வீட்டுக்கு சென்ற போது குழந்தைகள் இல்லை.
அவர்களைத் தேடிய போது பக்கத்து வீட்டிலுள்ள குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தனர்.
இதனால் கிங்ஸ்லி கில்பர்ட் குழந்தைகள் மீது சாத்தான் புகுந்து விட்டதாகவும், அதனால் தான் வீட்டை விட்டு வெளியேறி சென்றுள்ளனர் என நினைத்து மூன்று குழந்தைகளையும் வீட்டுக்கு அழைத்து வந்து சாத்தானை விரட்டுவதாக கூறி கொடூரமாக தாக்கியுள்ளார்.
அவரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது என்றனர்.