ADDED : அக் 26, 2025 05:30 AM

கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில், முத்துராமலிங்க தேவர் 118வது ஜெயந்தி மற்றும் 63ம் ஆண்டு குரு பூஜை விழா, வரும் அக்., 30ல் நடைபெற உள்ளது. இதில், முதல்வர் ஸ்டாலின், அரசியல் தலைவர்கள் பங்கேற்று, தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்த உள்ளனர்.
மேலும், துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், பசும்பொன் வருவதாக, ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ., தலைவர் முரளி தரன் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், ''தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்த பிரதமர் மோடி வர இருந்தார். பீஹார் சட்டசபை தேர்தல் காரணமாக அவரால் வர இயலவில்லை. தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன், பிரதமர் மோடி வருவார்.
''தேவருக்கு, 'பாரத ரத்னா' விருது வழங்க, அதற்கான கமிட்டி விரைவில் முடிவு செய்யும். பா.ஜ.,வை பொறுத்தவரை, தேவர் நினைவிடத்தை தேசியமும் தெய்வீகமும் குடியிருக்கும் கோவிலாக நினைக்கிறோம்; அரசியலாக்க நினைக்கவில்லை,'' என்றார்.

