பசுபதி பாண்டியன் கொலைக்கு பழி தீர்க்க முயற்சி : இரு தரப்பினரையும் கைது செய்த போலீஸ்
பசுபதி பாண்டியன் கொலைக்கு பழி தீர்க்க முயற்சி : இரு தரப்பினரையும் கைது செய்த போலீஸ்
ADDED : டிச 28, 2012 12:09 AM
திண்டுக்கல்: பசுபதி பாண்டியன் கொலைக்கு, பழி தீர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள தயாராக இருந்தவர்கள் மற்றும் எதிர்தரப்பை சேர்ந்தவர்களை, போலீசார் கூண்டோடு கைது செய்தனர். தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனர், பசுபதி பாண்டியனை, திண்டுக்கல் நந்தவனப்பட்டியில் உள்ள அவரது வீட்டில், ஒரு கும்பல் வெட்டி கொலை செய்தது.
இக்கொலை வழக்கில் கைதான முத்துபாண்டி, 37, சமீபத்தில், சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்தார்.
தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் முன்னாள் நிர்வாகியான, இவரது கட்சி அலுவலகம் நாகல்நகர் ஸ்கீம் சாலையில் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு, டிச., 24, இரவு 7:00 மணிக்கு காரில் வந்து, முத்துபாண்டி இறங்கிய போது, அங்கு மறைந்திருந்த சிலர் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு, தப்பியதாக புகார் எழுந்தது. ஜன., 10ல் நடந்த பசுபதி பாண்டியன் கொலை சம்பவத்தின் ஓராண்டு நினைவு தினம் வர, இன்னும் சில நாட்களே உள்ளன. இக்கொலையில், தொடர்புடையவர்களை பழிவாங்க, அவரது ஆதரவாளர்கள் சபதம் மேற்கொண்டு, அதற்கான சூழ்நிலையை எதிர்பார்த்து காத்திருந்தனர். இதுகுறித்து, உளவு பிரிவு போலீசார் உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அளித்திருந்தனர். இதையடுத்து, பசுபதி பாண்டியன் தரப்பை சேர்ந்த ஐந்து பேரையும், எதிர்தரப்பை சேர்ந்த நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர்.
பசுபதி பாண்டியனின் நினைவு நாளை விமரிசையாக நடத்த, யாரிடமாவது பணம் கொள்ளையடிக்கலாம் என, திட்டமிட்ட போது, அவரது ஆதரவாளர்களை கைது செய்ததாகவும், எதிர்தரப்பை சேர்ந்தவர்கள் கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்குகளை நடத்த, பணம் இல்லாததால், கொள்ளையடிக்க திட்டமிட்ட போது கைது செய்ததாகவும், போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
