புவிசார் குறியீடு பதிவேட்டில்இடம் பிடித்தது பத்தமடை பாய்
புவிசார் குறியீடு பதிவேட்டில்இடம் பிடித்தது பத்தமடை பாய்
UPDATED : நவ 06, 2012 09:53 AM
ADDED : நவ 05, 2012 11:53 PM

சென்னை: திருநெல்வேலி மாவட்டம், பத்தமடையில் தயாராகும் பாய், நாச்சியார் கோவில் குத்துவிளக்கு, ஆகியவை, புவிசார் குறியீடு பதிவேட்டின் இதழில், இடம் பெற்றுள்ளன.
சில இடங்களில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள், பிரசித்தி பெற்றவையாக இருக்கும். காஞ்சிபுரம் பட்டு, திருநெல்வேலி அல்வா, தஞ்சாவூர் பொம்மை, என, அந்தந்த ஊருக்குத் தனித்துவம் கொண்டதாக, இந்தப் பொருட்கள் இருக்கும். அறிவுசார் சொத்துரிமை துறையின் கீழ், புவிசார் குறியீடு வருகிறது.பிரசித்தி பெறும் பொருட்களுக்கு, புவிசார் குறியீடு பதிவு பெற்றால், அந்தப் பொருளை, வேறு எந்தப் பகுதியிலும் தயாரித்து, உரிமை கொண்டாட முடியாது. இந்தக் குறியீடு பெற வேண்டும் என்றால், முதலில், அந்தத் துறையிடம் விண்ணப்பிக்க வேண்டும்.பத்தமடை எனும் ஊரில் தயாரிக்கப்படும் பாய், திருநெல்வேலி மாவட்டத்தில் பிரசித்தி பெற்றது.
தாமிரபரணி ஆற்றின் கரையில் விளையும் கோரைப் புல் கொண்டு, இந்தப் பாய், தயாராகிறது. அதேபோல், கும்பகோணம் அருகில் உள்ள, நாச்சியார் கோவிலில், குத்துவிளக்கு தயாரிக்கப்படுகிறது. வண்டல் மண், 'மெட்டல்' கொண்டு, இந்த விளக்கு தயாரிக்கப்படுகிறது. பத்தமடை பாய், நாச்சியார் கோவில் குத்துவிளக்கு, இரண்டையும், புவிசார் குறியீடு பதிவேட்டில், பதிவு செய்வதற்காக, தமிழ்நாடு கைவினை மேம்பாட்டுக் கழகம் சார்பில், விண்ணப்பிக்கப்பட்டது.
இதற்கான பணிகளுக்காக, அறிவுசார் சொத்துரிமை வழக்குகளில் ஆஜராகும், வழக்கறிஞர் சஞ்சய்காந்தி நியமிக்கப்பட்டார். விண்ணப்பங்களை, புவிசார் குறியீடுத் துறை பரிசீலித்து, அதன் பதிவாளர் தலைமையில், ஆய்வுக் குழுக் கூட்டம் நடத்தப்பட்டது. அந்தக் கூட்டத்தில், இந்தப் பொருட்களின் தனி சிறப்பு, தயாரிக்கும் முறை பற்றி விளக்கப்பட்டது. பின், விண்ணப்பங்களை, ஆய்வுக் குழு ஏற்று, புவிசார் குறியீட்டுக்கான இதழில், வெளியிட்டு உள்ளது.
இதுகுறித்து, வழக்கறிஞர் சஞ்சய்காந்தி கூறியதாவது:தற்போது, பத்தமடை பாய், நாச்சியார் கோவில் விளக்கு, இரண்டும், இதழில் வெளியிடப்பட்டுள்ளன. நான்கு மாதங்கள் முடிந்த பின், இவற்றுக்கு சான்றிதழ் கிடைக்கும்.அதன்பின், இந்தப் பொருட்களை, வேறு எந்தப் பகுதியிலும் தயாரித்து, அவைகளை பத்தமடை பாய் என்றோ, நாச்சியார் கோவில் விளக்கு என்றோ, யாராவது விற்பனை செய்தால், அவர்கள் மீது சிவில் மற்றும் கிரிமினல் நடவடிக்கை எடுக்கலாம்.இவ்வாறு, சஞ்சய்காந்தி தெரிவித்தார்.
